இத்தாலியில் கொரோனா கோர தாண்டவம்.. எங்கிலும் சடலங்கள்…

வூஹானில் தொடங்கிய கொரோனாவைரஸின் அட்டூழியம் உண்மையில் இத்தாலியில்தான் கோர தாண்டவமாடியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளிலேயே வயதானவர்கள் அதிகம் கொண்ட நாடு என்பதும் இத்தாலிக்கு இந்த அளவுக்கு அடி விழ முக்கியக் காரணம் என்று சொல்கிறார்கள்.

ஆனால் இது இத்தாலியுடன் நிற்காது என்றும் மற்ற நாடுகளும் கூட இத்தாலியை விட மோசமான பாதிப்பை சந்திக்கக் கூடும் என்று அவர்கள் வயிற்றில் புளியைக் கரைக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

இதுவரை இத்தாலியில் மட்டும் 6820 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவை விட இது இரண்டு மடங்கு அதிகமாகும்.

தினசரி நூற்றுக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. எங்கு பார்த்தாலும் மரண ஓலம்தான்.

இதற்கு எப்போது முடிவு என்றே தெரியாமல் இத்தாலி முழுவதும் கண்ணீர் அலையாக இருக்கிறது.

சீனாவில்தான் இந்த கோரமான வைரஸ் வெளிக் கிளம்பி வந்தது.

சீனாவை ஒரு கை பார்த்த இந்த வைரஸ் இப்போது இத்தாலியை உண்டு இல்லை என்று வாரிச் சுருட்டிக் கொண்டுள்ளது.

சீனாவை விட அதிக பாதிப்பை இத்தாலிதான் சந்தித்து வருகிறது.

சீனர்களின் தவறால் இன்று இத்தாலியர்களின் உயிர் சூறையாடப்பட்டு வருகிறது.

என்னவெல்லாமோ செய்து பார்த்தும் கூட வைரஸின் பரவலைக் குறைக்க முடியாமல் இத்தாலி திணறுகிறது.

இத்தாலியில் மட்டும் ஏன் இப்படி அதிக அளவில் உயிர்ப்பலி ஏற்பட வேண்டும்? அதற்கு என்ன காரணம்? நிறைய காரணங்கள் இருப்பதாக அந்த நாட்டின் தொற்றுநோய் சிகிச்சை மைய நிபுணர் டாக்டர் மஸ்ஸிமோ கல்லி கூறுகிறார்.

அவர் சொல்லும் முக்கியமான காரணங்களில் ஒன்று அதிக அளவில் பாதிக்கப்பட்ட பகுதி லோம்பர்டி என்ற இடம்தான். மிலன் நகரில் இந்த பகுதி உள்ளது. மிலன் நகரம்தான் இத்தாலியிலேயே அதிக பாதிப்பை சந்தித்த நகரமும் கூட.

கடந்த ஒரு மாதமாகவே இங்கு நிலைமை மோசமாகி வருகிறது.

கடுமையான பாதிப்புகள் கொண்டவர்களுக்குத்தான் இத்தாலி மருத்துவர்கள் சோதனைக்கு முன்னுரிமை தருகிறார்கள். இது பெரும் சிக்கலாக உள்ளது.

காரணம் எல்லோரையும் சோதனை செய்தால் அதனால் பல உயிர்களைக் காப்பாற்ற முடியாமல் போய் விடும் என்பதால் இப்படிச் செய்கிறார்களாம்.

இதனால் பலருக்கு அறிகுறிகள் முற்றிய பிறகே சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இப்படி தாமதமான முறையில் பரிசோதனைகள் நடப்பதால் உயிரிழப்பும் அதிகமாக இருக்கிறதாம்.

பல சம்பவங்களில் சோதனை முடிவு தெரிவதற்கு முன்பாகவே நோயாளிகள் இறக்கும் பரிதாபமும் அதிகரித்து வருகிறதாம்.

கொரோனாவைரஸ் நமது உடலுக்குள் புகுந்து 14 நாட்களுக்குப் பிறகுதான் அறிகுறியே தெரிய வரும்.

குறிப்பாக காய்ச்சல், வறட்டு இருமல், தொண்டை வலி உள்ளிட்டவை அப்போதுதான் தெரிய வரும்.

ஆனால் அதற்குள் அந்த நோயாளியி யாருடன் எல்லாம் தொடர்பில் இருக்கிறாரோ அத்தனை பேருக்கும் வைரஸ் பரவும் வாய்ப்பு உள்ளதான்.

இதுதான் நோயாளிகள் அதிகரிக்க முக்கியக் காரணம்.

இத்தாலியைப் பொறுத்தவரை மார்ச் 15ம் தேதி வரை நிலவரப்படி மொத்தம் 1 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு சோதனை நடத்தியுள்ளனர்.

ஆனால் இதே காலகட்டத்தில் தென் கொரியாவில் 3 லட்சத்து 40 ஆயிரம் சோதனை நடந்துள்ளது. இவர்களில் சாதாரண அறிகுறிகளுடன் வந்தவர்களும் உள்ளனர்.

இதுவரை 9000 பேருக்கு இங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் மரணம் என்பது வெறும் 0.6 சதவீதம்தான்.

கொரோனோ வைரஸானது அனைத்து வயதினரையும் தாக்கும் என்றாலும் கூட வயதானவர்களுக்குத்தான் அதிக சிக்கலை கொடுக்கிறதாம்.

அதாவது இத்தாலியில் மரணமடைந்தவர்களில் 85.6 சதவீதம் பேர் 70 வயதைத் தாண்டியவர்கள் என்று கணக்கு ஒன்று சொல்கிறது. இத்தாலியில்வயதானவர்கள் அதிகம்.

அதாவது ஐரோப்பாவிலேயே அதிக வயதானவர்களைக் கொண்ட நாடு இத்தாலிதான்.

இங்கு 65 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 23 சதவீதமாகும். உலகிலேயே ஜப்பானுக்கு அடுத்து அதிக வயதானவர்களைக் கொண்ட நாடு இத்தாலிதான்.

இத்தாலியில் உயிரிழப்பு அதிகமாக இருக்க அங்கு வயதானவர்கள் அதிகம் இருப்பதும் ஒரு முக்கியக் காரணம் என்று சொல்கிறார்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம், இத்தாலியில் நல்ல மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. பெரும்பாலும் அங்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுவும் கூட அங்கு அதிக நாள் மக்கள் உயிர் வாழ முக்கியக் காரணம்.

ஆனால் அதுவே தற்போது அவர்களுக்கு எமனாகி விட்டதுதான் கொடுமையானது. இதை இத்தாலியர்கள் எதிர்பார்க்கவில்லை.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட லொம்பார்டி பகுதியில் பல டாக்டர்கள் உரிய பாதுகாப்பு வசதியின்றியே பணியில் உள்ளனராம்.

இதனால் அவர்களின் உயிருக்கும் கூட ஆபத்து அதிகமாகவே உள்ளது.

இதுவரை 14 டாக்டர்கள் உயிரிழந்துள்ளனர்.

மொத்தமாக இத்தாலியில் பணியில் உள்ள டாக்டர்கள், நர்சுகள் என 3700 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அதிர வைக்கும் தகவலாகும்.

இதற்கிடையே இத்தாலியின் வட பகுதியில் கொரோனா தாக்கம் சற்று குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே