புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்நிலையில் அறந்தாங்கியில் வாக்குசேகரித்துவிட்டு காரில் சென்றுகொண்டிருந்த அமைச்சர் விஜயபாஸ்கர், சாலையோரத்தில் இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டார்.
உடனடியாக காரை நிறுத்திவிட்டு ஓடிச்சென்று ரத்தவெள்ளத்தில் கிடந்த அந்த இளைஞருக்கு தண்ணீர் கொடுத்து துரிதமாக முதலுதவி செய்தார்.
பின்னர் தன்னுடன் வந்த பாதுகாப்பு வாகனத்தில் அவரை ஏற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.
அமைச்சரின் இந்த செயல் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.