இந்தியாவில் கொரோனா வைரஸூக்கு 34 பேர் பாதிக்கப்பட்டு உள்ள சூழலில், ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து தமிழகம் திரும்பிய காஞ்சிபுரத்தை சேர்ந்த 45 வயது கட்டுமான தொழிலாளி ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்த தகவலை, மத்திய அரசின் சுகாதாரத்துறை சிறப்பு செயலாளர் சஞ்சீவ்குமார் உறுதி செய்துள்ளார்.

கடந்த 28 ம் தேதி விமானம் மூலம் தமிழகம் திரும்பிய காஞ்சி தொழிலாளி, காய்ச்சல் காரணமாக, சென்னை – ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேல் சிகிச்சைக்காக, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவரது ரத்த பரிசோதனை,கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டுக்கும், பின்னர், புனேவில் உள்ள ஆய்வகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இவருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை, மாலையில் உறுதி செய்த சுகாதாரத்துறை அதிகாரிகள், காஞ்சி தொழிலாளியை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் தனி வார்டில் தங்க வைத்து, தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் கொரோனா வைரஸால் ஒருவர், பாதிக்கப்பட்டு இருப்பது இதுவே முதன்முறையாகும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே