கொரோனா முன்னெச்சரிக்கை : டாஸ்மாக் பார்களை மூட உத்தரவு!

தமிழகம் முழுவதும் கிளப்புகள், பார்கள், விளையாட்டு அரங்குகள் டாஸ்மாக் பார்களை மார்ச் 31-ம் தேதிவரை மூட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது.

தற்போது, இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது.

அதனையடுத்து, மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

தமிழக அரசு சார்பிலும் கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழக அரசு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து விளையாட்டு அரங்குகள், கிளப்புகள், பார்கள்(டாஸ்மாக் பார்கள் உட்பட), கேளிக்கை விடுமுறை போன்றவற்றை மார்ச் 31-ம் தேதிவரை மூட வேண்டும்.

அதிகமாகக் கூட்டம் கூடும் ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள், கோடைக் கால பயிற்சி வகுப்புகள், முகாம்கள், மாநாடுகள், கருத்தரங்குகள், வணிகக் கண்காட்சிகள், கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் போன்ற நிகழ்வுகளை நடத்த மார்ச் 31-ம் தேதி வரை அனுமதி வழங்கக் கூடாது.

அண்டை மாநிலங்களில் இருந்து கொரோனா வைரஸ் நோய் நமது மாநிலத்தில் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு, உடனடியாக எல்லையோர மாவட்டங்களிலுள்ள கண்காணிப்பு சோதனை சாவடிகளில், நோய் கண்காணிப்பு பணிகள் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வருவாய்த்துறை, காவல்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலகர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே