சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள பாரதி கல்லூரியில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் இயந்திர வாகனங்களில் அலாரத்துடன் கூடிய அவசரகால விளக்கு பொருத்தப்பட்டு பயன்பாட்டுக்கு அனுப்பப்படுகிறது.
அதனை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் கண்காணிப்பு குழு சிறப்பு அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “சென்னையை பொறுத்தவரை தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த 3 மண்டலங்களுக்கு 10 ஐஏஎஸ் அதிகாரிகள், 10 ஐபிஎஸ் அதிகாரிகள், 10 கோட்டாட்சியர்கள் , 10 மருத்துவ வல்லுநர்கள் என 40 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை மொத்தம் மாநகராட்சியின் 19 துப்புரவு பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அனைவரும் இளம் வயதினர்.
அவர்களுக்கு இந்த நோய் தொற்றுக்கான அறிகுறிகளே இல்லாமல் தொற்று வந்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மீறுபவர்கள் மீது இன்று முதல் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்திய அளவில் தமிழகத்தில் ஒப்பிடும் பொழுது குறிப்பாக சென்னையில் தினசரி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எண்ணிக்கையானது 8 மடங்கு அதிகம்.
சென்னை மாநகராட்சியில் 10லட்சம் பேருக்கு 4000 மாதிரிகள் எடுக்கப்படுகிறது.
சென்னையில் நோய் பற்றிய அதிகரிப்பதற்கான காரணம், குறுகிய பரப்பளவில் அதிகப்படியான மக்கள் வசிக்கின்றனர்.
ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 25000 – 50000 க்கும் மேல் வசிப்பதால் சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்கிறது.
தூய்மை பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் zinc மற்றும் vitamin C மாத்திரைகள், கபசுரக் குடிநீர் தொடர்ந்து 10 நாட்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் பூ மற்றும் பழக்கடைகள் இடமாற்றம் செய்வது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை மீறி, சமூக இடைவெளிகளை முறையாக கடைபிடிக்காமால் இயங்கும் வங்கி அலுவலகங்கள், ஏடிஎம் மையங்கள், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் உடனடியாக மூடப்பட்டு சீல் வைக்கப்படும்.
சென்னை மாநகராட்சி பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவை தனிமைப்படுத்துதலுக்காக பயன்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.