சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை – உயர்நீதிமன்றம் உத்தரவு

கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 800 பேருக்கும், அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் ஒரு வாரத்தில் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநலக் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில், 26 பேருக்கும், மருத்துவர்களுக்கும், இயக்குநருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்தச் சூழ்நிலையில், மனநலக் காப்பகத்தில் உள்ள 20 வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 800 பேருக்கும், அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடத்த உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அனைத்து வித மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் அதன் மாநிலச் செயலாளர் நம்புராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், மனநலக் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்குத் தனிமனித இடைவெளி, கை கழுவுவது உள்ளிட்ட விஷயங்களை எடுத்துச்சொல்ல முடியாது என்பதால், அவர்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பதற்கான அபாயம் அதிகம் உள்ளதாகவும், நோய்த்தொற்றின் அறிகுறிகள் பற்றி அவர்களால் எடுத்துக்கூற இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுடன், கரோனா பரிசோதனை செய்யப்படாதவர்களும் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளதாகவும்; தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலோ, புதிதாக கிங் இன்ஸ்டிட்யூட்டில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு மருத்துவமனையிலோ அனுமதிக்க வேண்டும் எனவும் மனுவில் நம்புராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், அறிகுறி இல்லாமல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை, கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் வைத்துச் சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் இன்று (ஜூலை 16) விசாரணைக்கு வந்தபோது, மனநலக் காப்பகத்தில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்து வருவதாகவும், எவ்விதப் பாகுபாடும் காட்டப்படவில்லை என்றும் தமிழக அரசின் சிறப்பு வழக்கறிஞர் முத்துகுமார் தெரிவித்தார்.

ஆனால், மனநலக் காப்பகத்தில் இருப்பவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அவர்களுக்குச் சிறப்புக் கவனம் வழங்க வேண்டியது அவசியம் என்பதையும், அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களால்தான் அவர்களை நன்றாகக் கவனிக்க முடியும் எனவும் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்தினார்.

மனுதாரர் தரப்பு விளக்கத்தை மறுப்பதற்கில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனையும் மதிப்பது போலத்தான் அவர்களையும் நினைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு, மனநலக் காப்பகத்தில் சிகிச்சையில் உள்ள 800 பேருக்கு மட்டுமல்லாமல், மருத்துவர்கள், செவிலியர்கள், வார்டன்கள், சமையல்காரர்கள் என அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை செய்ய வேண்டுமென உத்தரவிட்டனர்.

ஒரு வாரத்தில் இந்தப் பரிசோதனைகளை முடிக்க வேண்டுமெனவும், அதில் கிடைக்கும் முடிவுகளைப் பொறுத்து எந்த மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டுமென்பதை அரசு முடிவெடுக்க வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே