பங்குச் சந்தை : முதலில் சரிவு முடிவில் உயர்வு!

பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு இந்த நாள் ஒரு மறக்க முடியாத நாள் தான்.

அந்த அளவுக்கு எடுத்த உடன் சரிவு, நடுவில் தேக்கம், முடிவில் உயர்வு என சில வாரங்களில் நடக்க வேண்டிய வர்த்தகம், ஒரே நாளில் நடந்து முடிந்து இருக்கிறது

இதற்கு மத்தியில் இந்திய சந்தைகள் சுமாராக 45 நிமிடங்கள் வர்த்தகம் நிறுத்தப்பட்டது வேறு தனியாக குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை 32,778 புள்ளிகளைத் தொட்டு நிறைவடைந்தது சென்செக்ஸ், இன்று காலை சுமாராக 31,214 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி சில நிமிடங்களிலேயே 29, 388 புள்ளிகளைத் தொட்டது.

இது சுமாராக 10 % சரிவு, எண்களில் பார்த்தால் 3,390 புள்ளிகள் சரிவு கண்டது.

இந்தியாவில் பொதுவாக, பங்குச் சந்தை இண்டெக்ஸ்கள் 10 சதவிகிதத்துக்கு மேல் சரிந்தாலோ அல்லது உயர்ந்தாலோ அப்போது ஒட்டு மொத்த சந்தையையும் வர்த்தகம் நடை பெறாமல் நிறுத்துவார்கள்.

அதைத் தான் சர்க்யூட் ஃபில்டர் என்பார்கள். இன்று இந்திய பங்குச் சந்தைகளிலும் அது தான் நடந்து இருக்கிறது.

சுமாராக 12 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய பங்குச் சந்தைகளில் டவுன் சர்க்யூட் ஃபில்டர் வந்தது இதுவே முதல் முறையாம்.

இப்படி ஒட்டு மொத்த இந்தியாவையே பங்குச் சந்தை செய்திகள் அலற விட்டுக் கொண்டு இருக்கிறது.

45 நிமிடங்களுக்குப் பிறகு, சுமார் 10.20 மணிக்கு மீண்டும் இந்திய பங்குச் சந்தைகள் வர்த்தகமாகத் தொடங்கின.

முதலில் மூன்று அடி வாங்கிக் கொண்டு, நான்காவது அடியை வில்லன் அடிக்க வரும் போது, வளைத்து வளைத்து அடிக்கும் எம்ஜிஆரைப் போல, இன்று சென்செக்ஸ் தொடக்கத்தில் சரிந்தது.

ஆனால் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் சுமாராக 1,325 புள்ளிகள் ஏற்றத்தில், 34,103 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

வழக்கமான நாட்களைப் போல, சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில் 25 பங்குகள் விலை ஏற்றத்திலும், 04 பங்குகள் மட்டுமே விலை இறக்கத்திலும் வர்த்தகமாயின.

இதில் எஸ் பி ஐ 13.87 %, டாடா ஸ்டீல் 13.48 % லாபம் பார்த்து இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் 2,548 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,247 பங்குகள் விலை ஏற்றத்திலும், 1,140 பங்குகள் விலை இறக்கத்திலும் வர்த்தகமாயின.

161 பங்குகள் விலை மாற்றமின்றி வர்த்தகமாயின.

13 பங்குகள் தன் புதிய 52 வார உச்ச விலையையும், 1,340 பங்குகள் தன் 52 வார குறைந்த விலையையும் தொட்டு வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.

இன்று மார்ச் 13, லண்டனின் எஃப் டி எஸ் இ 4.90 % உயர்வு, பிரான்ஸின் சி ஏ சி 4.62 % உயர்வு, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 3.98 % உயர்வு என ஐரோப்பிய சந்தைகள் எல்லாமே கொஞ்சம் தேறி ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன.

அவர்களைத் தொடர்ந்து ஆசிய சந்தைகளும் ஒரு கணிசமான ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

  • சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி 5.27 % ஏற்றம்
  • தாய்லாந்தின் எஸ் இ டி காம்போஸைட் 1.26 % ஏற்றம்
  • இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் 0.24 % ஏற்றம் கண்டு இருக்கின்றன.
  • ஜப்பானின் நிக்கி 6.08 % % சரிவு
  • சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் 1.67 % சரிவு
  • ஹாங்காங்கின் ஹேங்செங் 1.14 % சரிவு
  • தைவானின் தைவான் வெயிடெட் 2.82 % சரிவு
  • தென் கொரியாவின் கோஸ்பி 3.43 % சரிவு
  • சீனாவின் ஷாங்காய் காம்போசைட் 1.23 % சரிவு என சில சந்தைகள் பெரிய சரிவில் தான் வர்த்தகமாயின.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சுமாராக 73.85 -ஐத் தொட்டு வர்த்தகமாகிறது.

அதே போல, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 36.76 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

ஒருவழியாக சென்செக்ஸ் ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது பலருக்கும் ஒரு நிம்மதியைக் கொடுத்து இருக்கிறது என்றே சொல்லலாம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே