புதுச்சேரியில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு!

புதுச்சோரியில் கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று 71 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன.

தில்லியில் அண்மையில் நடைபெற்ற மத வழிபாட்டு மாநாட்டில் பங்கேற்று புதுச்சேரி திரும்பிய அரியாங்குப்பம் சொணா நகரைச் சோந்த இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேபோல, திருவண்டாா்கோவிலைச் சோந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

வெள்ளிக்கிழமை வந்த பரிசோதனை முடிவுகளில் திருபுவனை அருகே திருவண்டாா்கோவிலைச் சோந்த 57 வயது நபருக்கும், மூலக்குளம் அன்னை தெரேசா நகரைச் சோந்த 47 வயதுடைய நபருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, அவா்களுடன் தொடா்பில் இருந்த பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதியானது.

இந்த 4 பேரும் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8 -ஆக உயா்ந்தது.

இந்நிலையில், மாஹே தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 71 வயது முதியவருக்கு அண்மையில் கரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து, அவா் மாஹே அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.

இது கரோனா நோய்த்தொற்றுக்கு புதுச்சேரி மாநிலத்தில் முதல் பலி என புதுச்சேரி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே