கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 4,789-ஆக அதிகரித்துள்ளது.
உலக அளவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, தற்சமயம் உலகளவில் சுமார் 209 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது.
அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124-ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை கூறியதாவது; கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 4 ஆயிரத்து 789 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கை 353 ஆனது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
கேரளாவில் 15,541 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக மகாராஷ்டிராவில் 4000 முகாம்களும் உத்தரப்பிரதேசத்தில் 2,230 முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.
நாடெங்கும் மொத்தம் 26,476 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் அரசு 22,567 முகாம்களையும் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் 3909 முகாம்களையும் அமைத்துள்ளன.
அரசு அமைத்துள்ள முகாம்களில் 6,31,119 பேரும் தன்னார்வு தொண்டு நிறுவன முகாம்களில் 4,05,908 பேரும் தங்கி உள்ளனர்.
இதைத் தவிரப் பணி அளிக்கும் நிறுவனங்கள் 15,05,107 பேருக்கு உணவு மற்றும் தங்குமிடம் அளித்துள்ளன.
மகாராஷ்டிராவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,018-ஆக அதிகரித்துள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 150 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் ஆயிரத்தை தாண்டிய முதல் மாநிலம் மகாராஷ்டிரா.