13 வகையான தொழிற்சாலைகள் குறித்த தெளிவு அறிக்கை வாபஸ்

சிமெண்டு, ரசாயனம், சர்க்கரை உள்ளிட்ட 13 வகையான தொழிற்சாலைகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்த நிலையில், அந்த தெளிவு அறிக்கையை தற்போது திரும்பப் பெறப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 4,500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 115-க்கும் அதிமானோர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரையில் இன்று வரை 690 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

எனவே, கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.

இதனால், தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் அறிவித்துள்ளன.

அதோடு, 3 மாதங்களுக்கு வீடு, வாகன கடன்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்களையும் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அறிவித்திருந்தாலும், மருந்தகங்கள், மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விற்பனையகங்களை திறந்திருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இரும்பு, சிமெண்ட், உரம் உள்பட 13 வகையான பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசு அனுமதியளித்தது.

அதாவது இரும்பு, சிமெண்ட், மருந்து, உரம், சர்க்கரை, காகிதம், கண்ணாடி, டயர், சாயத்தொழிற்சாலைகள், சுத்திகரிப்பு ஆலைகள், ரசாயனம், ஜவுளி உற்பத்தி ஆகிய தொழிற்சாலைகள் இயங்கலாம் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போது இது குறித்து வெளியிட்ட அரசாணையை திரும்ப பெற்று பழைய நிலையே தொடரும் என கூறியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே