குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் கலந்தாய்வு

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கான பணி நியமன கலந்தாய்வானது சென்னை பாரிமுனையில் இருக்கக்கூடிய டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதி மாநிலம் முழுவதும் இருக்ககூடிய 9 ஆயிரத்து 782 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்றது.

அதன் முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட உடனேயே அதன் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

ஆனால் இந்த குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் ஒரே தேர்வு மையத்தை தேர்வு செய்து முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து 99 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை விதித்து டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் அதிரடியான ஒரு உத்தரவை பிறப்பித்தது.

அதன் பிறகு ஏற்கனவே வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில், கீழ் நிலையில் இருந்தவர்களை மேலே கொண்டு வந்து குரூப் 4 தேர்வுக்கான ஒரு புதிய தரவரிசை பட்டியலை அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு, வரும் 19ம் தேதி முதல் இதன் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவித்திருந்தது.

இந்நிலையில் புதிய தரவரிசை பட்டியலின் அடிப்படையில் தற்போது சென்னை பாரிமுனையில் தேர்வர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வானது தொடங்கி நடைபெற்று வருகிறது.

குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 20க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் முறைகேடு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வரக்கூடிய சூழ்நிலையில் குரூப் 4 பணிக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே