மருத்துவ கல்லூரிகளின் கட்டுமானம் : தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் கட்டப்படும் 11 மருத்துவ கல்லூரிகளையும் தேசிய மருத்துவ ஆணைய விதிகளின் அடிப்படையில் கட்ட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் 75 மருத்துவ கல்லூரிகளை கட்ட மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது. இதில் தமிழகத்தில் 11 கல்லூரிகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி கட்டப்படும் புதிய மருத்துவ கல்லூரிகள், மருத்துவ கவுன்சில் விதிகளின்படி கட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, ராஜசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில்  விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் 2010ம் ஆண்டு மருத்துவ கவுன்சில் விதிகளின்படி மருத்துவ கல்லூரிகள் கட்டக் கோரியுள்ளார் எனவும், தற்போது மருத்துவ கவுன்சில் தேசிய மருத்துவ ஆணையமாக மாற்றப்பட்டு, 2018 மற்றும் 2020ம் ஆண்டுகளில் மருத்துவ கல்லூரிகள் கட்டுவதற்கான புதிய விதிகளை வகுத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் மருத்துவ கல்லூரிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அரசுத்தரப்பு வாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி மருத்துவ கல்லூரிகளை கட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

விதிகளின்படி மருத்துவ கல்லூரிகளின் கட்டுமானங்கள் அமைந்துள்ளதா என தேசிய மருத்துவ ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை துவங்குவதற்கு அனுமதி கோரி, தேசிய மருத்துவ ஆணையத்துக்கு விரைவில் விண்ணப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு,  வழக்கை முடித்து வைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே