சிவகங்கையில் ஆளே இல்லாமல் பிரச்சாரம் செய்த நடிகர் கஞ்சா கருப்பு

சிவகங்கை அரண்மானைவாசலில் ஒரு ஈ, காக்கா கூட இல்லாமல் பிரச்சாரம் செய்த நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு சற்று நேரத்தில் விரக்தியில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

சிவகங்கை அரண்மனைவாசல் அதிகளவில் மக்கள் வந்து செல்லக் கூடிய பகுதி. மேலும் இப்பகுதி பேருந்து நிலையம் செல்லும் வழி என்பதால் அதிக போக்குவரத்து இருக்கும். இதனால் எளிதில் கூட்டம் சேர்ந்துவிடும் என்பதால் அரசியல் கட்சியினர் தங்களது தலைவர்கள் பிரச்சாரங்களை இப்பகுதியில் தான் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பகல் 1 மணிக்கு அரண்மனைவாசலில் சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதனை ஆதரித்து நகைச்சுவை நடிகர் கஞ்சாகருப்பு பிரச்சாரம் செய்தார்.

அவர் 10 நிமிடங்கள் பேசியும் ஒரு ஈ, காக்கா கூட வரவில்லை. அவ்வழியாக சென்றவர்கள் கூட வாகனத்தை நிறுத்தாமல் கடந்து சென்றனர். மேலும் அங்கே இருந்த கடைகளுக்கு வந்தவர்கள் கூட கண்டுகொள்ளாமல் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

தொண்டைத் தண்ணீர் வற்றப் பேசியும் யாரும் வராததால் அதிருப்தி அடைந்த கஞ்சாகருப்பு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

ஒருகாலத்தில் திரைப்பட நடிகர், நடிகைகள் வந்தாலே கூட்டம் குவியும். ஆனால் இந்தத் தேர்தலில் நடிகர், நடிகைகள் பிரச்சாரம் செய்தாலும் பெரிய அளவில் கூட்டம் கூடவில்லை. சிலருக்கு அந்தக் கட்சியினரே கூட்டத்தை கட்ட, ஆட்களை அழைத்து வந்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே