உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் வெற்றியை தடுக்க சதி…! ஸ்டாலின் குற்றச்சாட்டு

உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் வெற்றியை தடுக்க அதிகாரிகள் உதவியுடன் ஆளுங்கட்சி சதியில் ஈடுபடுவதாக, திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில், மாநில தேர்தல் கமிஷனரை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்.

அப்போது தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதாக ஸ்டாலின் புகார் தெரிவித்தார்.

பின்னர் நிருபர்களை சந்தித்த ஸ்டாலின் கூறுகையில், உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று காலையில் இருந்து நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை நிலவரத்தின் அடிப்படையில் திமுக கூட்டணி பெரிய வெற்றியை எதிர்நோக்கி முந்தி கொண்டிருக்கிறது.

ஏறக்குறைய 80 சதவீதத்திற்கு மேல், எங்களது அணி வெற்றி பெறுகிறது. முன்னணியில் உள்ளது என்ற செய்தி வருகிறது.

இதனை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஆளுங்கட்சி அதிமுக அதிகாரிகள், போலீசார் உதவியுடன் திட்டமிட்டு சதி செய்து, தடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது.

முதல்வர் சொந்த மாவட்டமான சேலத்தில் எண்ணி முடிக்கப்பட்டு அறிவிக்கப்பட வேண்டிய தேர்தல் முடிவுகளை கூட இதுவரையில் அறிவிக்காமல் இருக்கிறார்கள் என்ற செய்தியை திமுக எம்.பி. தகவல் தருகின்றனர்.

சேலம் கொளத்தூரில் 800 ஓட்டு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். அதனை அறிவிக்கவில்லை.

அதே பகுதியில், அதிமுகவினர் வெற்றி பெற்றனர். இதனை அறிவித்துள்ளனர்.

திமுகவின் வெற்றியை பின்னர் அறிவிப்போம் எனக்கூறுகின்றனர்.

கொங்கநாதபுரம், எடப்பாடி, சங்ககிரி போன்ற பகுதிகளில் திமுக வெற்றி பெற்றிருக்கிறது.

முன்னணியில் இருக்கிறது என்ற செய்தி அறிவிக்கவில்லை. முதல்வரின் மைத்துனர் வெங்கடேசன், ஓட்டு எண்ணிக்கையில் மையத்தில் உள்ளார்.

அவரது ஆலோசனை பேரில் அதிகாரிகள் செயல்படுவதாக தகவல் வந்துள்ளது. பல இடங்களில் திமுகவின் வெற்றி, முன்னிலையை அறிவிக்க அதிகாரிகள் மறுக்கின்றனர்.

இது போன்ற செயல்களில் ஆளுங்கட்சி செயல்பட்டு, திமுக வெற்றியை தடுத்து நிறுத்த முயற்சி செய்கின்றனர்.

கட்சி வழக்கறிஞர்கள், தேர்தல் ஆணையத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் புகார் அளித்தோம். ஆனால், எந்த பதிலும் கிடைக்கவில்லை.

இதனால், நானே நிர்வாகிகளை அழைத்து சென்று புகார் கூறினேன்.

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நியாயமான முறையில் நடத்தி முடிவுகளை உடனே அறிவிக்கக்கோரி மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமியை சென்னை கோயம்பேடு ஆணையத்தில் சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

தேர்தல் ஆணையர் பழனிசாமி அரை மணி நேரத்தில் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்துள்ளார். இதனை நம்பி செல்கிறோம்.

நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்துள்ளோம். மாலைக்குள் நிச்சயம் செல்வோம். அங்கிருந்து நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம்.

அரைமணிநேரத்தில் முடிவு கிடைக்கவில்லை என்றால், தேசிய அளவில் போராட்டம் நடத்துவதா?? மாநில தேர்தல் ஆணையம் முன்பு உண்ணாவிரதம் இருப்பதா?? என முடிவு செய்வோம் என இவ்வாறு அவர் கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே