மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஸ் நாராயணன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த பி.ஜே.குரியன் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை1ம் தேதியுடன் ஓய்வு  பெற்றார்.

இதனையடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக போட்டியிட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐக்கிய ஜனதாதள எம்.பி. ஹரிவன்ஸ் நாராயணன் சிங்க்கு 125 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்ததால் அவர் வெற்றி பெற்று, முதன்முறையாக மாநிலங்களவை துணைத் தலைவராக கடந்த 2018-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார்.

இந்தநிலையில் மாநிலங்களவையின் துணைத் தலைவராக இருந்த எம்.பி. ஹரிவன்ஸ் பதவிக்காலம் முடிந்ததையடுத்து புதிய துணைத் தலைவரைத் தேர்வு செய்ய தேர்தல் இன்று மாநிலங்களவையில் நடைபெற்றது.

அந்த பதவிக்கு எம்.பி. ஹரிவன்ஸ் நாராயணன் சிங் மீண்டும் பாஜக கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவிக்கு, எதிர்க்கட்சிகள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த மனோஜ் ஜா வேட்பாளராக நிறுத்தினர்.

தொடர்ந்து, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, எம்.பி ஹரிவன்ஸ் சிங்கை முன்மொழிந்ததையடுத்து குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதனையடுத்து, எம்.பி. ஹரிவன்ஸ் நாராயணன் சிங் 2-வது முறையாக மாநிலங்களவை துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.

எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட  ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த மனோஜ் ஜா தோல்வி அடைந்தார்.

பிரதமர் மோடி வாழ்த்து:

மாநிலங்களவை துணைத்தலைவராக 2-வது முறை தேர்வு செய்யப்பட்ட ஹரிவன்ஸ் நாராயண் சிங்கிற்கு மாநிலங்களவையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர் ஹரிவன்ஸ் சிங். சபையின் ஒவ்வொரு உறுப்பினரும் ஹரிவன்ஷ் ஜி மீது வைத்துள்ள மரியாதையை அவர் பெற்றுள்ளார்.

பாராளுமன்றத்தில் அவரது சார்பற்று செயல்படும் தன்மை நமது ஜனநாயகத்தை பலப்படுத்துகிறது. மிகவும் கடினமான சூழலில் கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

நாடாளுமன்ற கூட்டத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும்; மாநிலங்களவை தலைவர், துணைத் தலைவருக்கு உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

எம்.பி. குலாம் நபி ஆசாத்:

ஹரிவன்ஸ் நாராயண் சிங் சபையின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இது இரண்டாவது முறையாகும். நான் அவரை வாழ்த்துகிறேன். அவர் அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களிடமும் இருந்தார் என்று காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே