தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு; தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி!

தமிகத்தில் மீண்டும் சட்ட மேலவையைக் கொண்டு வரவும், சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களைப் பாதுகாக்க ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச் சட்டம் கொண்டு வரவும் வலியுறுத்தப்படும் என காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை கே.எஸ்.அழகிரி சத்தியமூர்த்தி பவனில் இன்று வெளியிட்டார்.

காங்கிரஸ் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் :

* முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கண்ட கனவின்படி, உள்ளாட்சிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* திறமையும், வலிமையும், அர்ப்பணிப்பும் கொண்ட தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

* தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வருடம் ஒன்றுக்கு பன்னிரண்டாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ள சிறந்த 500 இளைஞர்கள், இளம் பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உணவு மற்றும் உறைவிடம் வழங்கி, 3 ஆண்டுகளுக்கு குடிமைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்குப் பயிற்சி வழங்கி அவர்களை பணியில் அமர்த்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* தொழில் துறையில் பின்தங்கிய மாவட்டங்களில் இருந்து தொழில் தொடங்க விரும்புவோருக்கு, நிலம், மின்சாரம் போன்ற தொழில் ஆதாரத் தேவைகளுக்கு விலையில் சலுகையும் கட்டணத்தில் மானியமும் வழங்கப்படும்.

* அதிமுகவில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஒப்பந்தக்காரர்கள் கூட்டணி அமைத்து ஒப்பந்தங்களைத் தொகுப்பதற்கு வழிவகுத்த விதிகள் மாற்றியமைக்கப்படும்.

* புதிதாகத் தொழில் முதலீடு செய்கிற முனைவோருக்கு குறைந்தது 5 ஆண்டுகளுக்கு வரி விலக்கு.

* பண மதிப்பிழப்பு, குளறுபடியான ஜிஎஸ்டி மற்றும் கரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நுண் தொழில் முனைவோர், வங்கிகளில் பெற்ற கடனுக்காக 50 சதவிகிதத்தைத் தமிழக அரசு மானியமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழகத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த தமிழக சட்ட மேலவை, நியாயமற்ற காரணங்களைக் கூறி, கடந்த காலத்தில் கலைக்கப்பட்டது. ஜனநாயகத்தில் சட்டப்பேரவையும், மேலவையும் இரு கண்களாகச் செயல்பட்டு வந்தன. இந்நிலையில், விவாதங்கள் செழுமை பெற மீண்டும் சட்ட மேலவையைக் கொண்டு வர வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.

* தமிழகத்தில் புதிய அரசு அமைந்ததும் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பெண்களுக்குச் சமவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி, மீனவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

* விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசின் 3 விவசாயச் சட்டங்களுக்குப் பதிலாக, தமிழகத்தில் விவசாயிகளைப் பாதுகாக்கும் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும்.

* காவிரி நீர் மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்றுக் குழுவையும் தன்னாட்சி அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தக் காங்கிரஸ் கட்சி நடவடிக்கை மேற்கொள்ளும்.

* நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில் கல்லூரிகளிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் சேருவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள 7.5 சதவிகிதம் ஒதுக்கீட்டை 10 சதவிகிதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* முதியோர் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படுவதோடு, அதனை அஞ்சல் துறை மூலம் நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* இந்து அறநிலையத் துறைக்குட்பட்ட திருக்கோயில்களில், இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* முதியோர் உதவித் தொகை பெறுவோர் குடும்பத் தலைவராக இருந்தால், அவர்களது வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழகத்தில் மின் தேவையைக் கணக்கிட்டு, அதற்கு ஏற்றாற்போல் புதிய மின் திட்டங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள் ஆணவப் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க தனிச் சிறப்புச் சட்டங்கள் கொண்டு வரப்படும்.

* மாதம் ஒருமுறை விசைத்தறியாளர்களுக்கு மின் கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

* திருநங்கைகளுக்கான நல்வாழ்வை உறுதிப்படுத்த, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சீர்திருத்தங்கள் செய்யப்படும்.

* பணியின்போது பாதிக்கப்படும் பத்திரிகையாளர்களுக்கு உரிய நிவாரணமும், பணியின் போது இறக்க நேரிடும் பத்திரிக்கையாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரண நிதியும் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே