2 லட்சம் முதியோருக்கு தடுப்பூசி போட இலக்கு: புதுச்சேரி சுகாதாரத் துறை செயலர் தகவல்

புதுச்சேரியில் சுமார் 2 லட்சம் முதியோருக்கு கரோனா தடுப்பூசி போட விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக சுகாதாரத் துறை செயலர் அருண் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நேற்று 603 பேருக்கு புதிதாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில்புதிதாக 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் இதுவரை 40,044 பேர்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 17 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 186 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவை பிருந்தாவனத்தைச் சேர்ந்த 76 வயது முதியவர் ஜிப்மரில் நேற்று உயிரிழந்தார். மாநில அளவில் இறப்பு எண்ணிக்கை 672 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, புதுச்சேரி சுகாதாரத் துறை சார்பில் மருந்து வணிகர்கள் நலச் சங்கத்தின் மூலம் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சியை சுகாதாரத் துறை செயலர் அருண் நேற்று தொடங்கிவைத்தார்.

அப்போது அவர் கூறுகையில்,“முதியோர், 45 வயதுக்கு மேற்பட்டபல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டோர் நேரடியாக தடுப்பூசி போட அரசு மருத்துவமனைகளுக்கு வரலாம். பதிவு செய்துவிட்டு 10 நிமிடங்களில் தடுப்பூசி போடலாம். அரைமணி நேரம் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அதன்பிறகு வீடு திரும்பலாம். இதற்காக 22 மையங்கள் அரசு தரப்பில் தயாராக உள்ளன. விழிப்புணர்வு ஏற்படுத்த மருந்தகங்களில் அறிவிப்பு சுவரொட்டிகளை ஒட்டுகிறோம். மக்களின் ஒத்துழைப்பும் தேவை.

புதுச்சேரியில் சுமார் 2 லட்சம் முதியோர் உள்ளனர். அவர்களுக்கு தடுப்பூசி போடுவதை இலக்காக வைத்து இந்த விழிப்புணர்வை தொடங்கியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே