கொசுவலை தயாரிப்பு ஆலையில் வருமான வரி சோதனை நிறைவு!

கரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தில் 4 நாட்களாக நடைபெற்று வந்த வருமானவரி சோதனை நிறைவு பெற்றது.

இதில் 80 கோடி ரொக்கம், 10 கிலோ தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கரூரைச் சேர்ந்த சிவசாமிக்கு சொந்தமான சோபிகா இம்பெக்ஸ் என்ற கொசுவலை தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் வருமான வரி சோதனை தொடங்கியது.

தொழிற்சாலை, அலுவலகம், உரிமையாளரின் வீடு ஆகிய இடங்களில், 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இரவு பகலாக சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

சோபிகா இம்பெக்ஸ் நிறுவனத்தில் இருந்து ஜாப் வொர்க் பெற்று கொசுவலை தயாரிக்கும் சிறிய அளவிலான நிறுவனங்கள் சிலவற்றிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது

சனிக்கிழமை மாலை சிவசாமியின் வீட்டில் அலமாரியில் இருந்து 32 கோடி ரூபாய் ரொக்க பணமும் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்களும் எடுக்கப்பட்டது.

4-வது நாளாக தொடர்ந்த சோதனை இன்று காலை 10 மணிக்கு நிறைவுக்கு வந்தது. மொத்தம் 60 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் சுமார் 80 கோடி ரூபாய் ரொக்க பணம், 10 கிலோ தங்கம் மற்றும் சுமார் 100 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே