விவசாயிகளுக்கு உரிமைகள், வேலைவாய்ப்புகள், இழப்பீடுகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மக்களவையில் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் 6ஆவது நாளான இன்று மாநிலங்களவை பல்வேறு அமளிகளால் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் மக்களவையில் விவசாயிகள் பிரச்சினையை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசி வருகிறார்.
அவர் கூறுகையில் விவசாயிகள் போராட்டத்தின் போது 700 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடமும் விவசாயிகளிடமும் மன்னிப்பு கோரினார்.
இதன் மூலம் அவர் தனது தவறை ஒப்புக் கொண்டுவிட்டார். கடந்த மாதம் 30-ஆம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் எத்தனை பேர் இறந்தனர் என மத்திய வேளாண் துறை அமைச்சரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் தங்களிடம் அதுகுறித்த தரவுகள் (டேட்டாக்கள்) இல்லை என்றார். பஞ்சாபை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ரூ 5 லட்சம் இழப்பீட்டை காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் அரசு வழங்கியுள்ளது.
அது போல் 152 பேரின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பும் கொடுத்துள்ளது. என்னிடம் அதற்கான பட்டியல் என்னிடம் உள்ளது. ஹரியானாவில் இறந்த 70 விவசாயிகளின் விவரங்கள் அடங்கிய மற்றொரு பட்டியலையும் நாங்கள் வைத்துள்ளோம். ஆனால் மத்திய அரசோ பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பெயர்கள் தங்களிடம் இல்லை என தெரிவிக்கிறது. இந்த பட்டியலை நான் மக்களவையில் தாக்கல் செய்கிறேன்.
விவசாயிகளுக்கு உரிமைகள் கொடுக்கப்பட வேண்டும். அவர்களுக்கு இழப்பீடும் வேலைவாய்ப்பும் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு மக்களவையில் ராகுல் காந்தி விவசாயிகள் குறித்த பிரச்சினைகளை பேசியிருந்தார். 3 வேளாண் சட்டங்களை நீக்கக் கோரி விவசாயிகள் ஓராண்டாக போராட்டம் நடத்திவந்தனர்.
பல கட்ட பேச்சுவார்த்தைகளை மத்திய அரசுடன் விவசாய சங்கங்கள் நடத்தியும் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் அவர்களது போராட்டம் தொடர்ந்தது. இந்த போராட்டத்தில் வெயில், கடும் குளிர் உள்ளிட்டவற்றால் 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துவிட்டனர். இந்த நிலையில் கடந்த மாதம் 3 வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி வாபஸ் பெற்றார்.