டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு..!!

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பெய்து வருகிறது. மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

குடியிருப்புகளில் புகுந்துள்ள வெள்ளநீர் வடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். விட்டு விட்டு பெய்து வரும் மழையால் சாலைகள் வெள்ளக்காடக காட்சியளிக்கின்றன. மாநிலம் முழுவதும் பல சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளன.

இந்த நிலையில் இன்று முதல் வரும் 11ஆம் தேதி வரை மழை பெய்வதற்கான வாய்ப்பு குறித்து வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தென்காசி மாவட்டத்தில் 10 செமீ மழை பதிவாகியுள்ளது. தேனி மாவட்டத்தில் 8 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

இன்றைய தினம் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வடகிழக்குப் பருவக்காற்று காரணமாக நாளைய தினம் கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

டிசம்பர் 09ஆம் தேதியன்று அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

ஏனைய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 10 மற்றும் 11ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே