விவசாயம் சார்ந்த மாவட்டங்களில் விவசாய கல்லூரி: தமாகா தேர்தல் வாக்குறுதி..

65 வயது தாண்டிய பெண்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என தமாகா உறுதியளித்துள்ளது.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் 2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் வெளியிட்டார். அப்போது, தமிழகத்தில் தமாகா போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறினார்.

மேலும் கூறிய ஜி.கே.வாசன், “தற்போது ஆட்சியில் இருக்கும் மத்திய, மாநில அரசுகளை விட வேறு எந்த ஆட்சியும் விவசாயிகளுக்கு சிறப்பான திட்டங்களை தந்திருக்க முடியாது. மத்திய, மாநில அரசின் திட்டங்களை செயல்படுத்த தமிழ் மாநில காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும்.” என்றார். அத்துடன், 10 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை அதிமுக வழங்கி வருகிறது என்றும் ஜி.கே.வாசன் கூறினார்.

தமாகாவின் தேர்தல் அறிக்கையில், மகாத்மா காந்தி பெயரிலே விருது வழங்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு ஒழுக்கநெறி வகுப்புகள். 65 வயது தாண்டிய பெண்களுக்கு இலவச பஸ் பாஸ். சாலையோரம் படுத்து உறங்குபவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல்.

விவசாயம் சார்ந்த அனைத்து மாவட்டத்திலும் ஒரு விவசாய கல்லூரி. விவசாய கடன் வழங்க தனி நிதி ஆணையம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், தமிழக அரசியல் கட்சியினர் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றனர். இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே