இடதுசாரி கூட்டணியை தோற்கடிக்க முஸ்லிம் லீக், காங்கிரஸுடன் பாஜக ரகசிய கூட்டணி அமைத்தது உண்மை தான்: ஓ. ராஜகோபால் ஒப்புதல்

கேரளாவில் முந்தைய தேர்தல்களில் இடதுசாரி கூட்டணியை தோற்கடிக்க காங்கிரஸ், முஸ்லீம் லீக் கட்சிகளுடன் இணைந்து இணக்கமான வியூகம் வகுத்தது உண்மை தான் என பாஜக மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான ஓ.ராஜகோபால் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும்தான் கடுமையான போட்டி இருந்து வருகிறது. பாஜக தனித்து போட்டியிடுகிறது.

2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இதே கூட்டணி களம் கண்டன. ஆனால் இடதுசாரி கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் உள்ள வலிமை மிக்க ஈழவ சமூகம் சார்ந்த அரசியல் அமைப்பான பாரத் தர்ம ஜனசேனாவுடன் கூட்டணி வைத்து பாஜக போட்டியிட்டது. 15.8 சதவீத வாக்குகளுடன், ஓரிடத்தில் பாஜக வென்றது.

கேரளாவில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இடையே மட்டுமே இதுவரை நேரடி போட்டி நிலவும் நிலையில் இந்த முறை தனது வாக்கு வங்கியை காண்பிக்கும் நோக்குடன் பாஜகவும் களமிறங்கியுள்ளது.
இந்தநிலையில் கேரள மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி அண்மையில் தெற்கு கேரளாவில் சில தொகுதிகளை பாஜகவுக்கு விட்டு தரவும், அதற்கு பதிலாக மற்ற தொகுதிகளில் இடதுசாரி கூட்டணிக்கு பாஜக வாக்களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் பாஜக மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான ஓ.ராஜகோபால் தொலைக்காட்சி ஒன்று அளித்துள்ள பேட்டியில் இதற்கு முன்பு காங்கிரஸுடன் இணைந்து இடதுசாரி கூட்டணியை தோற்கடிக்க தேர்தல் வியூகம் வகுத்தாக கூறியுள்ளார் அவர் கூறியுள்ளதாவது:

தேர்தல் சமயத்தில் குறிப்பிட்ட சில தொகுதியில் ரகசிய கூட்டணி அமைப்பது கட்சிகளின் வழக்கம் தான். பாஜக சில தொகுதிகளில் இடதுசாரி கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவும், பாஜக வேட்பாளர் கூடுதல் வாக்குகள் பெற வேண்டும் என்பதற்காகவும் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளுடன் பரஸ்பரம் சில இணைக்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

இது வெளிப்படையானது தான். இதனை கூட்டணியாக கருத முடியாது. அதேசமயம் ஓட்டு சிதறாமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கை மட்டுமே. இதன் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தியுள்ளாம். கடந்த தேர்தல்களில் ஒத்தபாலம் மற்றும் மஞ்சேஸ்வரம் தொகுதிகளில் பாஜகவுக்கு பலன் கொடுத்துள்ளது. இடதுசாரி கூட்டணி தோல்வியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே