அரசு மரியாதையுடன் கி.ரா. உடல் சொந்த ஊருக்கு புறப்பட்டது..!!

புதுச்சேரி அரசு சார்பில் எழுத்தாளர் கி.ரா. உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இடைச்செவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கி.ரா. என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1923ம் செப்டம்பர் 19ம் தேதி பிறந்த இவர் ‘கரிசல் இலக்கியத்தின் முன்னோடி’ என போற்றப்படுகிறார்.

1958 ம் ஆண்டு முதல் இறுதி வரை எழுதிக்கொண்டே இருந்தார். 7ம் வகுப்பே படித்து இருந்தாலும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறப்பு பேராசிரியராக பணியாற்றிய இவர் சாகித்திய அகாதமி விருதைப் பெற்றவர். இவரது இலக்கியப் பணிக்கு மரியாதை செலுத்தும் வகையில் புதுச்சேரி லாஸ்பேட்டையில் அவருக்கு வீடு ஒன்றை அரசு அளித்துள்ளது. அவரது மூத்த மகன் திவாகரன், இளைய மகன் பிரபி என்கிற பிரபாகரன்.

கி.ரா.வை எழுத்தாளரான இளைய மகன் பிரபியும் ஒளிப்படக் கலைஞர் இளவேனிலும் கடைசி நாள் வரை கவனித்து வந்துள்ளனர். அவரது மனைவி கடந்த 2019ல் காலமானார். கரோனா காலத்திலும் அவர் கைப்பிரதியாக “அண்டரெண்டப்பட்சி”என புத்தகத்தை தன் கைப்பட எழுதியுள்ளார். இதை அச்சில் ஏற்றாமல் கைப்பிரதியாகவே வாசகர்கள் படிக்க வேண்டும் என. கி.ரா. விருப்பம் தெரிவித்தார். தான் எழுதாமல் விட்ட கதைகளை தொகுப்பாகக் கொண்டு “மிச்ச கதைகள்” என்ற புத்தகத்தை அண்மையில் வெளியிட்டார்.

கடந்த டிசம்பர் 26ம் தேதி சுயநினைவுடன் எழுதிக் கொள்வதாக கூறி ஒரு எழுத்து படிவத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

அதில் தனது படைப்புகள் அனைத்தும் வாசகர் புதுவை இளவேனிலுக்கும், அவரது மூத்த மகன் திவாகரன், இளைய மகன் பிரபி என்கிற பிரபாகரன் ஆகியோருக்கும் அவர் கைப்பட எழுதியுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ பதிவினை ஒன்றையும் கி. ராஜநாராயணன் வெளியிட்டுள்ளார். இன்று முதல் தனது படைப்புகள் அனைத்தும் இந்த மூவரையும் சாரும் என வாசகர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது படைப்புகளை வெளியிடும் பதிப்பாளர்களும் திரைப்படமாக வெளியிடுபவர்களும் அதன் ராயல்டியை இந்த மூவருக்கும் கொடுக்க வேண்டும் எனக் கையொப்பமிட்டு உள்ளார். இந்த மூவரும் தனது படைப்புகள் மூலம் வரும் வருவாயில் ஒரு பகுதியை “கரிசல் அறக்கட்டளை” எனத் துவங்கி எழுத்தாளர்களுக்கும் சிறு பத்திரிகைகளுக்கும் தனது பெயரில் பணமுடிப்புடன் கூடிய விருதினை வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இதுவரை 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை கி.ரா. வெளியிட்டார். தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக எழுத்துப் படைப்புகள் அனைத்தையும் வாசகர் ஒருவருக்கு எழுத்தாளர் எழுதி கொடுத்து இருப்பது இதுவே முதல் முறை.

கி. ராஜநாராயணனுக்கு 99 வயது. புதுச்சேரி லாஸ்பேட்டை அரசுக் குடியிருப்பில் அவரது இல்லத்தில் நேற்று இரவு காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்ற நிலையிலே அவர் இறந்துள்ளார்.

புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் வசித்து வந்த மூத்த எழுத்தாளர் கி.ரா. நேற்று இரவு உயிரிழந்தார். அவரது உடலுக்கு ஆளுநர் தமிழிசை, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏக்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

ஆளுநர் தமிழிசை கூறுகையில், “கரிசல் காட்டு மண்ணுக்கு அங்கீகாரம் கிடைக்கச் செய்த பிரமாண்ட எழுத்தாளர். பேராசிரியராக புதுச்சேரி வந்து ஊருக்கே ஆசிரியரானர். பலரும் அவரால் உருவாக்கப்பட்டுள்ளனர். அவரை இழந்து வாழும் இலக்கிய உலகுக்கு ஈடு சொல்ல முடியாத நிலை. கி.ரா.வின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு குடும்பத்தார் நினைத்துள்ளார்கள். அரசு ரீதியாக துணை நிற்கவும், உதவவும் உறுதி தருகிறேன். அதேபோல் தமிழகத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய இருப்பது மரியாதைக்குரியது. புதுச்சேரி அரசு மரியாதையுடன் தமிழக அரசும் மரியாதை செய்வது தமிழுக்கு செய்யும் மிகப்பெரிய மரியாதை. கி.ரா. வாழ்ந்த இல்லத்தில் நூலகம் அமைப்பது தொடர்பான கோரிக்கை பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம்” என்று குறிப்பிட்டார்.

மதியம் 1 மணியளவில் கி.ரா. உடலுக்கு புதுச்சேரி அரசு தரப்பில் போலீஸ் மரியாதை எழுத்தாளர் கி.ரா. உடலுக்கு அளிக்கப்பட்டது. அரசு தரப்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் புதுச்சேரியிலிருந்து கோவில்பட்டி இடைச்செவல் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆம்புலன்ஸ் தமிழக காவல்துறை வாகன பாதுகாப்புடன் புறப்பட்டது.

இதுதொடர்பாக அவரது குடும்பத்தினரிடம் கேட்டதற்கு, “இரவுக்குள் அவரது உடலை இடைச்செவல் கொண்டு சென்று மக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இறுதி சடங்குகள் நாளை நடக்கும். அப்போது தமிழக அரசு மரியாதை நடக்கிறது. தமிழக, புதுச்சேரி அரசுகளுக்கு நன்றி ” என்று குறிப்பிட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே