குடியுரிமை சட்டம்: போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களிடம் கமல் பேச்சுவார்த்தை

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியிலுள்ள ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியது, நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பாண்டிச்சேரி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் நேற்றைக்கு முந்தைய நாள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சுமார் 150-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு டிசம்பர் 23-ம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் இரவு முழுவதும் பல்கலைக்கழகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பல்கலைக்கழகத்தின் இருபுறத்திலுள்ள நுழைவு வாயில்களும் மூடப்பட்டுள்ளன.

காவல்துறையினர் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு நேரில் சென்று மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

அவரையும் காவல்துறையினர் உள்ளே அனுமதிக்கவில்லை. அதனால், வாயிலுக்கு வெளியே நின்று மாணவர்களிடம் பேசினார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இங்கு மட்டுமில்லாமல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தரமணி, மெரினா உள்ளிட்ட வளாகங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது போராட்டம் பெட்டிச் செய்தியுடன் அடங்கிவிடக் கூடாது. இந்த மாணவர்களின் போராட்டதுக்கு பதில் சொல்ல வேண்டியது இந்திய, தமிழக அரசின் கடமை. மாணவர்களை அகதிகளாக்க முயற்சித்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே