சினிமா பட பாணியில் கோர்ட் அறையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட கொலை குற்றவாளி..!

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்ட நீதிமன்றத்திற்குள் விவாதத்தின்போது கொலை குற்றவாளி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஈஷான் அகமது மற்றும் அவரது உறவினர் சதாப் ஆகியோர் கடந்த மே மாதம் 28ம் தேதி தொழில் போட்டி காரணமாக சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.

இந்த கொலையை செய்ததாக ஷாநவாஸ் மற்றும் ஜாஃபர் என்ற இருவர் டெல்லியில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பின்னர் அவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் இருவரும் வழக்கு விசாரணைக்காக பிஜ்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது நீதிமன்ற அலுவலகத்திற்குள் 11வது வகுப்பு படிக்கும் ஈஷான் அகமதுவின் மகன் மற்றும் அவனுடைய இரு நண்பர்கள் துப்பாக்கியுடன் இருந்துள்ளனர்.

வழக்கு குறித்த வாதமானது நீதிபதி முன்பாக தொடங்கிய சில நிமிடங்களில் அவர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.

இதில் ஷாநவாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் நீதிமன்ற அலுவலகத்திற்குள் இருந்த காவலர்கள் சிலர் மீது துப்பாக்கி குண்டு தாக்கியதில் அவர்கள் காயமடைந்தனர்.

நீதிமன்ற அலுவலகத்திற்குள் நீதிபதி முன்பாக நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்த சிலர், கண் இமைக்கும் நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டதாகவும், துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டவுடன் உடனடியாக பாதுகாப்பிற்காக நீதிபதி உட்பட அனைவரும் தரையில் படுத்துக்கொண்டதாகவும் கூறினர்.

துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மூவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், தமது தந்தையை கொன்றதற்கு பழிவாங்க சுட்டதாக கூறினார். இந்த சம்பவத்தில் அஜாக்கிரதையாக இருந்தததாக 18 போலிசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே