குடியுரிமை திருத்த சட்டம்: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரும் எதிர்ப்புகளுக்கு இடையில் குடியுரிமை சட்ட திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. இந்த குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் பல்வேறு பகுதிகளில் தீவிரம் அடைந்து வருகிறது.

அசாம், டெல்லி, மேற்கு வங்கம், ஹைதராபாத், பீகார், உத்தர பிரதேசம், கேரளா என்று பல பகுதிகளில் தீவிரமாக போராட்டம் நடந்து வருகிறது.

இந்த விஷயத்தில் அமைதியாக இருந்த காங்கிரஸ் கட்சியும் தற்போது தீவிரமாக போராட்டம் செய்ய தொடங்கி விட்டது. இதற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் நடந்து வருகிறது; தமிழகத்தில் திமுக சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் காந்தி ரோடு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இஸ்லாமியர்களை நசுக்குவதே பாரதிய ஜனதாவின் வேலை என விமர்சித்தார்.

மக்களுக்கு பாதகம் செய்யும் ஆட்சியையே பாரதிய ஜனதா நடத்தி வருவதாக குற்றம்சாட்டிய அவர், மக்கள் ஒற்றுமையில் பாஜக நஞ்சை கலப்பதாக கூறினார்.

குடியுரிமை சட்டத்திருத்தத்தில் சேர்க்கப்படாத ஈழத் தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என்ன பாவம் செய்தார்கள் என்றும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்றும் அந்த கூட்டத்துக்குப் பின் அடுத்தகட்ட போராட்டம் பற்றி அறிவிக்கப்படும் என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

இதேபோல் சென்னை மண்ணடி பகுதியில் மாவட்ட செயலாளர் சேகர்பாபு தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.பியும், மகளிர் அணிச் செயலாளருமான கனிமொழி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய கனிமொழி, இலங்கை தமிழர்களுக்கு அதிமுகவும், பாமகவும் துரோகம் செய்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.

அவர்கள் இருவரும் வீதியில் இறங்கி வாக்கு கேட்கும் தகுதியை இழந்து விட்டார்கள் எனவும் விமர்சித்தார்.

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.பி தயாநிதி மாறன் கலந்து கொண்டார்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், சட்டத்திருத்த ஆதரவுக்கு காரணம் கூட்டணி தர்மம் என ராமதாஸ் கூறியது நல்ல நகைச்சுவை என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே