உணவு, மருத்துவம் அளவிற்கு சினிமா அத்தியாவசியமல்ல – கமல்ஹாசன்

சினிமா படப்பிடிப்புக்கு அவசரமில்லை என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கரோனா அச்சுறுத்தல் என்பது மிக அதிகமாக இருக்கிறது.

இதனிடையே இன்று (ஜூன் 5) உலக சுற்றுச் சூழல் தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் ‘நாமே தீர்வு’ என்ற தன்னார்வலர்கள் திட்டத்தைத் தொடங்கியுள்ளார் கமல்.

இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டு விட்டு, ஜூம் செயலி மூலம் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அப்போது, “65 வயதுக்கு மேற்பட்ட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு படப்பிடிப்புத் தளத்தில் அனுமதியில்லை என்று மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. 

இந்தியத் திரையுலகில் இதுவொரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு கமல் கூறியதாவது:

“சினிமா நட்சத்திரங்களும், நடிகர்கள், தொழிலாளர்களும் புரிந்துகொள்ள வேண்டியது… சினிமா என்பது பள்ளி, மருத்துவமனை, போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவை மையங்கள் அல்ல.

அது பொழுதுபோக்கு இடம் தான். எப்படி கிரிக்கெட் ஆட வேண்டாம் என்று இருக்கிறார்களோ, அதேபோல் சினிமாவும் வேண்டாம் என்றிருப்பது பெரிய தவறாகிவிடாது.

முண்டியடித்துக் கொண்டு டாஸ்மாக் திறந்தது மாதிரி, சினிமா படப்பிடிப்பைத் தொடங்க அவசரம் காட்டத் தேவையில்லை.

மருத்துவமனைகளை வலுப்படுத்த வேண்டும். ஆலயங்களை எல்லாம் மூடி வைத்திருக்கும்போது, டாஸ்மாக்கைத் திறக்க வேண்டியதில்லை என்பதுதான் என்னுடைய விமர்சனம்.

அதே மாதிரி ஒரு கட்டுப்பாடு என்றால், அதற்கு எனக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கிறது. அப்படித்தான் நினைத்துக் கொள்ள வேண்டும்.

அப்படியொரு முடிவு எடுத்திருப்பது அவருடைய நலனையும் கருத்தில் கொண்டுதானே. அதில் விவாதிப்பதற்குப் பெரிதாக ஒன்றுமில்லை என்பது என் கருத்து”.

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 1071 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே