சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு!

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாகச் சென்னையில் கடந்த சில நாட்களாக நாள்தோறும் 1000-ஐ கடந்து பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் மொத்தம் 18,693 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 3,388 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் சென்னையில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

எனினும் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் வெளியே நடமாடுவதை காணமுடிகிறது.

இந்நிலையில் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர்கள் ஜெயக்குமார். கே.பி. அன்பழகன், காமராஜ், உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 5 அமைச்சர்களுக்கும் தலா மூன்று மண்டலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி ராயபுரம், தண்டையார்பேட்டை, மாதவரம் மண்டலங்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களை கே.பி.அன்பழகனுக்கும்;

அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்கள் அமைச்சர் காமராஜிடமும் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும், திருவொற்றியூர், மணலி, திரு.வி.க.நகர் மண்டலங்களை அமைச்சர் உதயகுமார் கண்காணிப்பார் என்றும்;

அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர் மண்டலங்களை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கண்காணிப்பார் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி அதிகாரிகள், மருத்துவத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள குழுவை ஒருங்கிணைத்து அவர்களின் பணியை அமைச்சர்கள் கண்காணிக்க உள்ளார்கள்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே