முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பு – டிடிவி தினகரன் கண்டனம்..!!

இலங்கைப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலையில் அமைக்கப்பட்ட நினைவுத்தூண் நேற்று நள்ளிரவில் இடித்து தகர்க்கப்பட்டுள்ளது.

இதனை கண்டித்து இலங்கை தமிழர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர், மற்றும் துணை முதல்வர் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். 

மேலும், பல்வேறு தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்,

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இரவோடு, இரவாக இடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. கடும் கண்டனத்திற்குரியது.

இலங்கையின் பூர்வ குடிகளான தமிழர்களின் உணர்வுகளோடு விளையாடும் இத்தகைய நடவடிக்கைகள் சரியானதல்ல. தமிழ் மக்களின் எண்ணங்களில் நிறைந்திருக்கும் போராட்டத்தின் நினைவுகளை, சின்னங்களை அழிப்பதன் மூலம் அகற்றிவிட முடியாது.

தமிழர்களின் உயர்வையும் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பற்றி சிந்திப்பதற்குப் பதிலாக இப்படி சர்வாதிகாரமாக நடந்து கொள்வது விரும்பத்தகாத விளைவுகளையே ஏற்படுத்தும். இதனை இலங்கை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.” என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே