அனிருத் இசையில் வெளியாகியுள்ள தர்பார் படத்தின் சிங்கிள் டிராக், ஐயப்ப சுவாமி பாடல் ஒன்றின் காப்பி என்று கூறி சமூக வலைதளங்களில் சினிமா இசை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ரஜினியின் தர்பார் திரைப்படத்தின் சிங்கிள் டிராக் யூடியூப்பில் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்ச கணக்கான முறை பார்க்கப்பட்டு ரசிகர்களின் ஆதரவால் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.
இந்த பாடலுக்கு இசை அமைத்துள்ள இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன், பாடலுக்கு உரிய மெட்டை பல வருடங்களுக்கு முன்பு வெளியான அய்யப்ப சுவாமி ஆல்பத்தில் இருந்து காப்பி அடித்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
மற்றொரு தரப்போ இது பல வருடங்களுக்கு முன்பு தேவா இசையில் வெளியாகி ஹிட் அடித்த வைகாசி பொறந்தாச்சு படத்தில் இடம்பெற்ற தண்ணி குடம் எடுத்து என்ற பாடலின் மெட்டு என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
அனிருத் பழைய பாடல்களை காப்பி அடிப்பதாக எழும் குற்றச்சாட்டு ஒன்றும் புதிதல்ல. அவருக்கு பெரும் புகழை ஈட்டித்தந்த முதல் பாடலான வொய் திஸ் கொலை வெறி பாடல் கூட, இளையராஜாவின் வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும் என்ற பாடலும், சந்திர போஸ் இசையில் வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை என்ற பாடலும் சேர்ந்த கலவை என்று விமர்சிக்கப்பட்டது
எல்லாவற்றிற்கும் மேலாக அனிருத் இசையில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் பாடல் ஒன்று வெளி நாட்டு ஆல்பத்தில் இருந்து சுடப்பட்டது என்று ரிப்போர்ட் ஆனதால் அந்த பாடல் யூடியூப்பில் இருந்தே நீக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
அனிருத் மனதில் தற்போது தோன்றிய இசையை போலவே பல ஆண்டுகளுக்கு முன்பே பிரபல இசையமைப்பாளர்களுக்கும் அதே இசை தோன்றியதால் தான் மெட்டு ஒரே மாதிரி அமைந்திருக்கிறது என்று சமூக வலைதளங்களில் சத்தமில்லாமல் கிழி கிழி என்று கிழிக்கின்றனர்.