லடாக் எல்லையில் சீன படைகள்…! முப்படைகளின் தலைமைத் தளபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

இந்திய எல்லை பகுதியில் சீனா அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படை தலைமை தளபதி, முப்படை தளபதிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்தியதாக டில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

அருணாச்சல பிரதேசத்தை தொடர்ந்து தற்போது லடாக் மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளிலும் இந்திய- சீன எல்லை பிரச்சனையால் பதட்டம் நிலவி வருகிறது.

வரையறுக்கப்பட்ட எல்லையை தாண்டி, இந்தியாவின் சில பகுதிகளை சொந்தம் கொண்டாடும் சீனா, அப்பகுதிகளில் ராணுவ நடமாட்டத்தையும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக சிக்கிம் பகுதியில் கடந்த மாதம் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பின் இந்த விவகாரம் மேலும் சிக்கலாகியது.

சீன எல்லைப்பகுதியை விரைவாக அடையும் வகையில், லடாக்கில் இந்தியா அமைத்துவரும் புதிய சாலையால் அதிருப்தியடைந்துள்ள சீனா, அப்பகுதியில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த 5-ஆம் தேதி லடாக் எல்லை பகுதியில் இந்திய-சீன வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும், இது 6-ஆம் தேதி காலை வரை நீடித்ததாகவும் தகவல் வெளியானது. 

இதனை தொடர்ந்து அப்பகுதியில் ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது சீனா.

அதேபோல இந்தியாவும் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி ராணுவ உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், முப்படை தளபதிகள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக,முப்படை தளபதிகள், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்தை சந்தித்து எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து விளக்கினர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே