சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளது.

சீன அதிபரின் பயண திட்டம் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. வரும் வெள்ளிக்கிழமை இந்தியா வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்-உடன் சென்னை மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

2 நாட்கள் நடைபெறும் இந்த சந்திப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் பேச்சுவார்த்தையின்போது இடம்பெறும் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.

இது நட்பு ரீதியான சந்திப்பு என்பதால் ஒப்பந்தங்கள் எதுவுமில்லை எனவும், இரு தலைவர்களின் கூட்டறிக்கை வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்தியாவும் சீனாவும் கூட்டாக பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியை இந்த ஆண்டு டிசம்பரில் நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மாமல்லபுரத்தில் நடக்கும் சந்திப்பின்போது, அடுத்த கட்டமாக இரு தரப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கான தேதியை முடிவு செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே சீன அதிபரின் பயண திட்டம் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.

சீன அதிபர் ஜீ ஜின்பிங் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அவருக்கு அங்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அதை தொடர்ந்து 1.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதிக்கு 2.05 மணிக்கு வருகிறார்.

மாலை 4 மணிக்கு புறப்பட்டு 4.55 மணிக்கு மாமல்லபுரம் சென்றடைகிறார்.

பின்னர் இரவு 8.05 மணிக்கு மாமல்லபுரத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதிக்கு வருகிறார்.

மறுநாள் சனிக்கிழமை காலை 9.05 மணிக்கு கிண்டியில் இருந்து புறப்பட்டு மாமல்லபுரம் அருகே கோவளத்தில் தாஜ் பிஷர்மேன் கோவ் ரிஸார்ட்டிற்கு செல்கிறார்.

பின்னர் அங்கிருந்து நண்பகல் 12.45 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.25 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.

அங்கு ஜி ஜின்பிங்-க்கு வழியனுப்பு விழா நடைபெறுகிறது. இதன் பிறகு 1.30 மணிக்கு அவர் சென்னையிலிருந்து புறப்பட்டு செல்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே