முதல்வரின் தாயார் மரணம்..; ஓபிஎஸ், ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல்..!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93), உடல்நலக்குறைவு காரணமாக சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று நள்ளிரவு (அக்.13) காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வம், துணை முதல்வர்

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமியின் அன்புத் தாயார் தவுசாயம்மாள் 93-வது வயதில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் நேற்று நள்ளிரவில் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு பெரிதும் வருத்தமுற்றேன்.

பெற்றெடுத்து,பேணி வளர்த்து, சான்றோனாய் உயரச்செய்த அன்புத் தாயாரின் பிரிவால் துயருற்றிருக்கும் முதல்வர் பழனிசாமிக்கு ஆறுதல் கூற வார்த்தையில்லை. தாயன்புக்கு நிகர் என்ன இருக்க முடியும்?

பாசமிகு தாயார் தவுசாயம்மாளை பிரிந்து வாடும் எடப்பாடி பழனிசாமிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினருக்கும் குடும்ப நண்பர்களுக்கும் எனது சார்பிலும், அதிமுகவின் சார்பிலும் அனுதாபத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மறைந்த தாயார் தவுசாயம்மாளின் ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

தவுசாயம்மாளின் நினைவுகளைப் போற்றி வணங்குகிறேன்.

மு.க.ஸ்டாலின், தலைவர், திமுக

“தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் தனது 93-வது வயதில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மனவேதனைக்கு உள்ளானேன். அவரது மறைவுக்கு திமுகவின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புமிக்க அன்னையை இழந்து வாடும் முதல்வருக்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”.

மேலும், மு.க.ஸ்டாலின், முதல்வர் பழனிசாமியைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு, அவரது தாயார் மறைவுக்குத் தமது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.

பன்வாரிலால் புரோஹித், தமிழக ஆளுநர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் காலமான செய்தி அறிந்து வேதனை அடைந்தேன்.

தனது நிபந்தனையற்ற அன்பு மற்றும் தியாகங்களால் பிறப்பிலிருந்து சரியான முறையில் வளர்த்த தாயின் இறப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரது மறைவுக்கு முதல்வர் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவருடைய ஆத்மா நித்திய அமைதியுடன் என்றென்றும் ஓய்வெடுக்கவும், எடப்பாடி பழனிசாமிக்கு பலம் கொடுக்கவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

வைகோ, பொதுச் செயலாளர், மதிமுக

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் இயற்கை எய்திய செய்தி அறிந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதல்வருடன் செல்பேசியில் தொடர்பு கொண்டு, மதிமுகவின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

ஜி.கே.வாசன், தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று இரவு மறைந்த செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

தமிழக முதல்வருடைய கடின உழைப்புக்கும் படிப்படியான உயர்வுக்கும் சிறுவயதில் இருந்தே அவர்களை வளர்த்து ஆளாக்கிய பெரும் பங்கு அவர்களது தாயாரையே சாரும்.

அன்பு தாயாரை இழந்து வாடும் எடப்பாடி பழனிசாமிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அதிமுகவினருக்கும் தமாகா சார்பிலே என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

சரத்குமார், தலைவர், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல் நலக்குறைவினால் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

அன்பால் அரவணைத்த தாயாரை பிரிந்து வாடும் முதல்வரின் வேதனையை உணர முடிகிறது. தாயின் மறைவு முதல்வருக்கும், அவரது குடும்பாத்தார்க்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை பிரிந்து வேதனையில் வாடும் முதல்வருக்கும், குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அம்மையார் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அன்னையார் தவுசாயம்மாள் தமது 93 ஆம் வயதில் காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.

அவரை இழந்து வாடும் முதல்வருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நமது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா ஆளுநர்

“தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே