முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93.

உடல்நலக் குறைவு காரணமாக, சேலத்தில் தனியார் மருத்துவமனையில் தவுசாயம்மாள் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நள்ளிரவில் உயிர் பிரிந்தது.

தகவல் அறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து உடனடியாக சேலம் புறப்பட்டு சென்றார்.

அதிகாலையில் சொந்த ஊரான சிலுவம்பாளையத்திற்கு சென்ற அவர், தனது தாயரின் உடலுக்கு, மலர்வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், கே.பி.அன்பழகன், ராஜேந்திர பாலாஜி, சரோஜா மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

எடப்பாடி பழனிசாமியின் வீட்டிலிருந்து, அவரது தாயாரின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, இறுதிச்சடங்குகளுக்குப் பிறகு மயானத்தில் காலை 9.30 மணியளவில் எரியூட்டப்பட்டது.

முதலமைச்சரின் அண்ணன், தாயாரின் உடலை எரியூட்டினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, அவரது தாயார் மறைவிற்குத் தமது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.

இதேபோல, நடிகர் ரஜினிகாந்தும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு தமது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே