2 வார கைக்குழந்தையுடன் கொரோனா பணிக்கு வந்த பெண் அதிகாரி..!

பிறந்து 2 வார ஆன கைக்குழந்தையை கையில் ஏந்தியபடி கொரோனா பணிக்கு திரும்பியுள்ளார் ஐஏஎஸ் அதிகாரி.

உத்தரபிரதேச மாநிலத்தின் காசியாபாத் மாவட்டத்தில் சப் கலெக்டராக பணியாற்றும் சவுமியா பாண்டேதான் அந்த தைரியசாலி.

நோடல் அதிகாரியாக பணியாற்றி வரும் சவுமியா, குழந்தை பிரசவித்த சோர்வு எதுவும் இன்றி பம்பரமாக சுழன்று பணியாற்றுவதை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 70 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை பாதித்துள்ளது. 60 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

9 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல நடவடிக்கைகள் எடுத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. 

கொரோனாவிற்கு தடுப்பூசி, மருந்து கண்டுபிடிக்கும் வரையிலும் சில தளர்வுகளுடன் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசியல் கட்சியினரும், அரசு அதிகாரிகளும் கொரோனா முன்கள பணியாளர்களாக இரவு பகல் பாராது வேலை செய்து வருகின்றனர்.

ஐஏஎஸ் அதிகாரிகளில் பலரும் வீடுகளுக்கு கூட போகாமல் வேலை செய்து வருகின்றனர்.

உத்தர பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் சவுமியா பாண்டே சப் கலெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

கொரோனா காலம் என்பதால் நோடல் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டிருந்த அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது வேலையை தொய்வின்றி செய்து வந்தார்.

சவுமியா பாண்டேவிற்கு கடந்த 2 வாரங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.

அரசு வேலையில் இருப்பவர்கள் 6 மாத காலம் வரை பேறுகால விடுப்பு எடுக்கலாம் என்ற சவுகரியம் இருந்தாலும் சவுமியா பாண்டே பிறந்த குழந்தையில் கையில் ஏந்தியபடி 14 நாட்களில் பணிக்கு திரும்பி விட்டார்.

கொரோனா காலத்தில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பணிக்கு திரும்பி விட்டார். கொஞ்சம் கூட சோர்வு எதுவும் இன்றி பிறந்த குழந்தையோடு வேலை செய்து வருவதை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர்.

அதே நேரத்தில் கொரோனா காலத்தில் பிறந்த குழந்தையுடன் பிரசவித்த தாயும் வேலைக்கு திரும்பியுள்ளது பாதுகாப்பானது இல்லை என்று சிலர் அறிவுறுத்தி வருகின்றனர்.

தான் பணிக்கு திரும்பியது பற்றி பேசிய சவுமியா பாண்டே, ”நான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதால் விடுமுறை காலத்தை அனுபவிக்க விரும்பவில்லை.

குழந்தை பெற்ற உடனேயே வேலை குறித்து யோசித்தேன். கொரோனா காலம் என்பதால் பொறுப்பு அதிகமாக உள்ளது என்று தெரிவித்தார்.

கடவுள் பெண்களுக்கு குழந்தைகளை பெற்றெடுத்து வளர்க்கும் வலிமையை கொடுத்துள்ளார்’ என்றும் தெரிவித்துள்ளார் சவுமியா பாண்டே ஐஏஎஸ்.

கிராமப்புற இந்தியாவில், பிரசவத்திற்கு அருகிலுள்ள நாட்களில் பெண்கள் தங்கள் வீட்டு மற்றும் கர்ப்பகால வாழ்வாதாரம் தொடர்பான வேலைகளைச் செய்கிறார்கள் மற்றும் பெற்றெடுத்த பிறகு அவர்கள் குழந்தையை கவனித்துக்கொள்கிறார்கள்.

மேலும் அவர்களின் வேலையையும் வீட்டையும் நிர்வகிக்கிறார்கள்.

இதேபோல், கடவுளின் ஆசீர்வாதங்கள்தான் என்னால் பணி செய்ய முடிகிறது எனது மூன்று வார பெண் குழந்தையுடன் எனது நிர்வாக பணி உற்சாகமாக தொடர்கிறது என்று கணித்துள்ளார் சவுமியா பாண்டே.

நம் ஊர் கிராம பகுதிகளில் விவசாய கூலி வேலைக்கு போகும் பெண்கள் கை குழந்தையை கையில் ஏந்தியபடி பணிக்கு செல்வதை பலரும் பார்த்திருப்போம்.

இப்போது ஐஏஎஸ் அதிகாரிகளே, கை குழந்தையுடன் பணி செய்து வருகின்றனர்.

ஆந்திராவின் விசாகப்பட்டிணத்தில் காப்பரேசன் கமிஷனர் ஸ்ரீஜனா கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்த 1 மாதத்தில் பணிக்கு திரும்பினார்.

தற்போது சவுமியா பாண்டே குழந்தை பிரசவித்த 14 நாட்களில் பணிக்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே