7.5% உள் ஒதுக்கீட்டில் ஆளுநரை வலியுறுத்தாமல் இருப்பது முதல்வர் செய்யும் துரோகம் : ஸ்டாலின் விமர்சனம்..!!

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்ட மசோதாவுக்கு ஆளுநா் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூலில், மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதால், 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு அளித்து தமிழகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவிற்கு இன்று வரை தமிழக ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல் இருப்பதும், அதுகுறித்த எந்த அழுத்தத்தையும் ஆளுநருக்குக் கொடுக்காமல் முதல்வர் பழனிசாமி வேடிக்கை பார்ப்பதும்; அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் செய்யும் துரோகமாகும்!

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என முன்பு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில், “தமிழக ஆளுநர் – முதல்வர் – மத்திய பா.ஜ.க. அரசு” ஆகியோர் ஒரு ரகசியக் கூட்டணி அமைத்து, நீர்த்துப் போக வைத்தது போல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவையும் நீர்த்துப் போக வைத்து விடக்கூடாது என்றும் – நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மசோதாவிற்கு உடனடியாக தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே