தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி..; பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி..!!

அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், பாரத பிரதமர் சிறப்பாக செயல்பட்டதால் கொரோனா தொற்று குறைந்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலை மாநில அரசுகள் முறையாக பின்பற்ற வேண்டும்.

எல்லா ஆலயங்களிலும் கட்டுப்பாடுகளுடன் பூஜைகள், வழிபாடுகள் நடத்த அனுமதி உள்ளது.

குமரி மாவட்டத்தில் அதி முக்கிய விழாவான விஜயதசமி மற்றும் சரஸ்வதி பூஜை விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

அதேபோல குமரி மாவட்டத்தில் உள்ள பத்பநாபபுரம் அரண்மனை கோயில், சரஸ்வதி தேவி விக்ரகம், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை விக்ரகம் உள்ளிட்ட சுவாமி விக்ரகங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்வது பலநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்து நடைமுறையில் உள்ள பாரம்பரியம்.

இந்த ஊர்வலம் நடத்த இரு மாநில அரசுகளும் அனுமதி அளிக்க வேண்டும்.

அதிமுகவினர் எந்த பிரச்சினையும் இல்லாமல் முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுத்துள்ளனர்.

அதிமுகவில் பிளவு ஏற்பட வேண்டுமென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் சில கட்சிகள் எதிர்பார்த்தது போல் இல்லாமல் நடந்து இருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகம் வருகின்ற தேர்தலில் மூன்றில் ஒருபங்கு வாக்குகளை பெற்றாலும் அதில் சந்தோஷமாக இருக்கும். தமிழ்நாட்டில் எங்கள் தலைமையில் கூட்டணி இல்லை.

அதிமுக தலைமையில் கூட்டணி உள்ளது. வரும் 2021-ஆம் ஆண்டு அரசு அமையும்போது அதில் அங்கம் வகிக்கும் கட்சியாக பாஜக நிச்சயம் இருக்கும்.

அதிமுக பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லாமல் நாங்கள் இருக்கிறோம். சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து நான் முடிவெடுக்க முடியாது. பா.ஜ.க அகில இந்திய கட்சி, அதனால் கூட்டணி குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும்” என கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே