2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழகத்தில் செயல்படுத்துவது குறித்து தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011ம் ஆண்டுக்கு பின்னர் 2021ம் ஆண்டு நடத்தப்படவுள்ளது.
அதற்கான பணிகள் வரும் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பை ஜூன் மாதம் தொடங்கி ஜூலை மாதத்துக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டு கட்டங்களாக கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளது.
வீட்டில் எத்தனை நபர்கள் இருக்கிறார்கள்? அவர்களின் பெயர், படிப்பு, வேலை, திருமணம் ஆனவர்களா?, குழந்தைகளின் விவரங்கள் உள்ளிட்ட 28 கேள்விகள் கேட்கப்பட உள்ளன.
கடந்த காலங்களில் காகித முறையில் நடைபெற்றுவந்த கணக்கெடுப்பு பணி, இம்முறை முதல்முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் செல்போன் செயலி மூலமாக நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை செயல்படுத்துவது குறித்து தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பல்வேறு துறைகளின் செயலாளர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.