அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் பதற்றம்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் குண்டுகள் மூலம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈராக்கின் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரான் ராணுவத் தளபதி சுலைமானி கொல்லப்பட்டார்.

இதன் எதிரொலியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

இதனிடையே பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் அமைந்துள்ள பகுதிகளில் அந்நாட்டு நேரப்படி இரவு 8 மணியளவில் ஈராக் படையினர் சரமாரியாக ராக்கெட் குண்டுகள் மூலம் தாக்குதல் நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.

சுமார் 5 குண்டுகள் அடுத்தடுத்து தாக்கப்பட்டதாகவும், இதில் மூன்று குண்டுகள் நேரடியாக அமெரிக்க தூதரகத்தை தாக்கியதாகவும் பாதுகாப்புப் படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

இருநாடுகளிடையே நீடிக்கும் மோதல், ஆபத்துக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே