ஜெய்ப்பூர்: பரபரப்பான சூழலில் ராஜஸ்தான் நம்பிக்கை ஓட்டெடுப்பில், முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.
ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவருக்கு எதிராக கட்சியின் துணை முதலமைச்சராக சச்சின் பைலட் திடீரென போர்க்கொடி உயர்த்தினார். தமது ஆதரவு எம்எல்ஏக்களுடன் அவர் கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராக செயல்பட்டார்.
அதன் எதிரொலியாக, பைலட்டிடம் இருந்து துணை முதலமைச்சர் பதவி, கட்சியின் மாநில தலைவர் பதவிகள் பறிக்கப்பட்டன. பைலட் ஆதரவு எம்எல்ஏக்களின் எதிர்ப்பால் கெலாட் அரசு கவிழும் சூழல் எழுந்தது.
ஆகையால் சட்டசபையை கூட்ட வேண்டும் என்றும் ஆளுநரிடம் பல முறை அசோக் கெலாட் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார். ஒரு கட்டத்தில் ஆகஸ்ட் 14ம் தேதி சட்டசபை கூட்டத்தை நடத்த அவர் ஒப்புதல் தந்தார். அதன்படி, இன்று ராஜஸ்தான் சட்டசபை கூடியது.
அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்பட்டது. குரல் மூலம் எடுக்கப்பட்ட இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கெலாட் அரசு வெற்றி பெற்றது. காங்கிரஸ் அரசும் தப்பியது.