நிவர் புயல் உருவானதுமே, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக, புயலால் தமிழகத்துக்கு பெரிய சேதம் ஏற்படவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறினார்.

கரோனா நோய்த்தொற்று தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், பல்வேறு தளா்வுகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறப்பைத் தவிா்த்து பெரும்பாலான தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

நோய்த்தொற்றின் தன்மையைத் தொடா்ந்து, டிசம்பா் மாதத்தில் எத்தகைய தளா்வுகளை அளிப்பது என்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் காணொலி வழியாக முதல்வா் பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்துகிறாா்.

காணொலி வழியாக நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தை தொடக்கி வைத்துப் பேசிய முதல்வர் பழனிசாமி, புயல் உருவான உடனேயே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக என்னை தொடர்பு கொணடு, தமிழகத்துக்குத் தேவையான உதவிகளை வழங்குவதாக அறிவித்தார்.

நிவர் புயலால் ஏற்பட்ட பயிர் சேதத்தை கணக்கிட்டு உரிய இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் மோடியும் தமிழகத்துக்குத் தேவையான உதவிகளை செய்வதாக நேற்று உறுதி அளித்துள்ளார்.

இனி வரும் காலங்களில் மழை நீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறப்பான நடவடிக்கையால், நிவர் புயல் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்று கூறிய முதல்வர் பழனிசாமி, தேவையான நடவடிக்கைகளை உரிய நேரத்தில் எடுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தனது பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

எனது தலைமையில், தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் முன்களப் பணியாளர்களின் சிறப்பான பணியால் தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் முதல்வர் கூறினார்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் மக்களுக்கு அனுமதி அளிப்பது, பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

இதைத் தொடா்ந்து, மருத்துவ நிபுணா் குழுவுடனும் அவா் ஆலோசிக்கவுள்ளாா்.

இந்த ஆலோசனைகளைத் தொடா்ந்து பல்வேறு தளா்வுகள் அடங்கிய அறிவிப்புகளை முதல்வா் பழனிசாமி வெளியிட உள்ளாா்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே