திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைகிறார்..!!

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் இன்று சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில் பாஜகவில் இணைகிறார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திமுகவை சேர்ந்த கே.பி.ராமலிங்கம் அண்மையில் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

அதில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசும் சிறப்பாக செயல்படுத்துகிறது.

அதை தவிர்த்து காணொலி காட்சி மூலம் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடத்தவேண்டும் என்ற கோரிக்கை அவசியமற்றது என தான் கருதுவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

இதனை அடுத்து, கே.பி.ராமலிங்கம் திமுகவில் வகித்து வந்த விவசாய அணி மற்றும் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. 

பின்னர் கே.பி.ராமலிங்கம் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பாக்களில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக (சஸ்பெண்ட் ) திமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

பின்பு கே.பி.ராமலிங்கத்தை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கி உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதனிடையே இன்று தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவியுடன் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் சந்தித்துள்ளார்.

இதனையடுத்து சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி முன்னிலையில் கே.பி.ராமலிங்கம் இன்று பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று தமிழகம் வரும் மத்திய அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித்ஷாவை கே.பி.ராமலிங்கம் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே