அதிமுக பொன்விழாவை முன்னிட்டு மறைந்த அதிமுக தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு ஓபிஎஸ்,இபிஎஸ் மரியாதை செலுத்தியுள்ளனர்.
அதிமுக பொன்விழாவை முன்னிட்டு கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள மறைந்த முன்னாள் தமிழக முதல்வர்கள் மற்றும் அதிமுகவின் தலைமைகளாக இருந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன்பின்னர்,கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் அதிமுக கொடியை இருவரும் ஏற்றியதை அடுத்து,”மக்கள் தொண்டில் மகத்தான 50 ஆண்டுகள்” என்ற பொன்விழா சிறப்பு மலரையும் வெளியிட்டு இனிப்புகள் வழங்கினார்கள்.
இதற்கிடையில்,சென்னை தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவில்லத்தில் சசிகலா அவர்கள், மாலையணிவித்து மரியாதை செலுத்தி உள்ளார். அங்கு, அதிமுக கொடியையும் ஏற்றி வைத்துள்ளார். அவருக்கு அங்கு மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும், எம்ஜிஆர் நினைவில்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. பொன்விழா ஆண்டும் கொடியேற்றும் நிகழ்வையொட்டி எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியேற்றி கல்வெட்டை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.