இராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம்..!!

திமுகவுக்கு எடுத்துதான் பழக்கமே தவிர கொடுத்துப் பழக்கம் இல்லை என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜன. 2) ராமநாதபுரம் மாவட்டத்தில், தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசியதாவது:

“மகளிர் சுய உதவிக்குழு கூட்டம் என்று எண்ணி நான் வந்தேன்.

ஆனால், மகளிர் கூட்டத்தைப் பார்க்கும் போது, கடல் அலை போல் எழுச்சி மிகு கூட்டம். ராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதற்கு இதுவே சான்று.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தமிழக அரசு அதிக அளவில் முக்கியத்துவம் தந்து வங்கிக்கடனை பெற்றுத்தருகின்றோம். கரோனா தொற்று காலத்திலும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தொழில் விரிவுபடுத்தவும், புதிய தொழில் தொடங்கவும் வங்கி இணைப்புக் கடனாக ரூ.12 ஆயிரம் கோடி வழங்கப்பட்டது.

இதனால், மகளிர் சுய உதவிக்குழுவில் இருக்கும் பெண்களின் வாழ்வாதாரம் சிறந்து விளங்குகிறது.

நான் ஏற்கெனவே ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த போது சுய உதவிக்குழு நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினேன்.

ஜெயலலிதா எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் மகளிர் சுய உதவிக்குழு அரங்கத்தினை பார்வையிட்ட பிறகு தான் மேடைக்குச் செல்வார்.

அந்த அளவுக்கு அவர் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மீது பாசமும், அன்பும் கொண்டவர். அவர்களது வாழ்க்கை தரம் என்று உயர வேண்டும் என்றே எண்ணியவர்.

தமிழக அரசும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்காக ஏராளமான திட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

2016 சட்டப்பேரவை பொதுத்தேர்தலிலே ஜெயலலிதா உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கப்படும் என அறிவித்தார்.

அதனை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு 3 லட்சம் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் வழங்கப்படும் என அறிவித்து தற்போது 90 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இரு சக்கர வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் வரை மானியம் வழங்கும் ஒரே அரசு தமிழக அரசு தான். இந்த திட்டத்தை பிரதமரை சென்னைக்கு அழைத்து அவரால் திட்டம் தொடங்கப்பட்டது.

இன்றைய தினம் வேலைக்குச் செல்லும் மகளிர் சிரமம் இல்லாமல், குறித்த நேரத்தில் வேலைக்குச் செல்லவும், பணி முடிந்து உரிய நேரத்தில் வீடு திரும்பவும் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் பேருதவியாக இருக்கின்றது.

அதே போல, ஏழை, எளிய பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை 1/2 பவுனில் இருந்து 1 பவுனாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 11 லட்சத்து 35 ஆயிரத்து 600 மகளிர் சுய உதவிக்குழுக்கள் இயங்கி வருகின்றது.

அதற்கு தமிழக அரசால் வங்கி இணைப்புக் கடனாக இதுவரை சுமார் ரூ.42 ஆயிரத்து 785 கோடி வழங்கப்பட்டுள்ளது.

பெண்கள் சமூக மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக தமிழக அரசு கடந்த உள்ளாட்சி தேர்தலில் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது.

ஜெயலலிதா அறிவித்தபடி அவரின் மறைவுக்குப் பிறகு, நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியது தமிழக அரசு.

ராமநாதபுரம் மாவட்டம் சிறக்க, செழிக்க அற்புதமான திட்டமான அரசு மருத்துவக் கல்லூரியை வழங்கினேன்.

சுமார் ரூ.400 கோடி மதிப்பீட்டில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் அமைய உள்ளது. தனியார் மருத்துவமனையில் என்னென்ன சிகிச்சை அளிக்கப்படுகிறதோ, அதைவிட சிறப்பாக சிகிச்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வழங்கப்படும். தனியார் மருத்துவமனையைவிட அனைத்து நவீன தொழில்நுட்பங்களும், உயர்தர மருத்துவ உபகரணங்களும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அமைய உள்ளது.

அதே போல, அரசு சட்டக் கல்லூரியையும் கொடுத்திருக்கின்றோம். நான் முதல்வராகிய பின்பு மருத்துவக் கல்லூரி, சட்டக்கல்லூரி இரண்டையும் கொடுத்துள்ளேன்.

அதேபோல, ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி துறைமுகம் அமைத்துக்கொடுத்துள்ளோம். குந்துக்கல் மீன்பிடி இறங்குதளம் ரூ.7.70 கோடியிலும், நோக்குவீர் மீன்பிடி துறைமுகம் ரூ.128.70 கோடியிலும் இந்த பகுதி மக்களுக்காக தமிழக அரசு செய்த நன்மைகள் ஆகும். ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வாங்குவதற்கு 348 மீனவர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். அதில் 63 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முதல்கட்டமாக 26 மீனவர்களுக்கு அரசு மானியத்துடன் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் நலன், விவசாயிகள் நலன், பொதுமக்கள் நலன் ஆகியவற்றில் அக்கறை கொண்ட அரசு தமிழக அரசு.

முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீட்டுத்தொகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளியில் பயிலும் 41 விழுக்காடு மாணவர்களுக்கு வெறும் 6 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்வி பயில இடம் கிடைத்தது. அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள், உழைக்கும் வர்க்கத்தின் மாணவர்கள். அவர்களுடைய கனவு நினைவாக வேண்டும் என்பதற்காக 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு நாங்கள் அறிவித்தோம்.

இந்த உள் ஒதுக்கீட்டின் மூலமாக 313 பேர் மருத்துவக் கல்வி பயில இடம் கிடைத்துள்ளது. 92 மாணவர்களுக்கு பல் மருத்துவக் கல்லூரியில் பயில இடம் கிடைத்துள்ளது. அனைவருக்கும் கல்வி கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளை தொடங்க இருக்கிறோம். அதன் மூலம் 1,650 புதிய இடங்கள் தோற்றுவிக்கப்படும்போது அதில் ஏறத்தாழ 135 இடங்கள் எம்பிபிஎஸ் பயில இடம் கிடைக்கும்.

இதனால் மொத்தமாக ஏறத்தாழ 448 மாணவர்கள் மருத்துவக் கல்வி பயிலவும், 150 மாணவர்கள் பல் மருத்துவம் பயிலவும் வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளோம். இது ஒரு வரலாற்றுச் சாதனையாகும்.

இன்றைக்கு நகரம் முதல் கிராமங்கள் வரை ஏழை, எளிய மக்கள் வசிக்கின்ற பகுதிகளில் ஒரே நேரத்தில் 2,000 அம்மா மினி கிளினிக் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 39 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவப் பணியாளர் அந்த பகுதியிலேயே பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.

நகரத்தில் காலை 8 முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும், கிராமங்களில் காலை காலை 8 முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் அம்மா மினி கிளினிக் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

அதே போன்று, முதியோர் நலன் காக்கும் தமிழக அரசு, 5 லட்சம் முதியோர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கும் என அறிவித்து, வழங்கப்பட்டு வருகிறது.

தைப்பொங்கல் திருநாளை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசால் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2,500 வழங்கப்படும்.

இதற்கான டோக்கன் கொடுக்கும் பணி நடைபெற்று வருகின்றது. வரும் 4 ஆம் தேதி முதல் அனைவருக்கும் ரூ.2,500, அதோடு முழுக்கருப்பு மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். அதேபோன்று, கரோனா காலத்தில் மக்கள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக எட்டு மாதங்கள் இலவசமாக அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை போன்றவற்றை வழங்கினோம்.

அதுமட்டுமல்லாது, அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.1,000 உதவித் தொகை வழங்கினோம். திமுக ஆட்சியில் இது போன்று ஏதாவது வழங்கியுள்ளார்களா? அவர்களுக்கு எடுத்துத்தான் பழக்கமே தவிர கொடுத்துப் பழக்கம் இல்லை.

எம்ஜிஆர், ஜெயலலிதா இருபெரும் தலைவர்களும் ஏழை எளிய மக்களுக்காக உழைத்து மறைந்தவர்கள். அந்த இருபெரும் தலைவர்களும் மக்களின் சோதனை காலத்தில் ஓடோடி வந்து உதவி செய்தவர்கள்.

அவர்கள் வழியில் நடைபெறும் நம் அரசும் சோதனையான காலகட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு அரணாகவும், உறுதுணையாகவும் இருந்து வந்திருக்கிறது என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

வருகின்ற 2021 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

காவேரி – குண்டாறு திட்டம் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தினால் ராமநாதபுரத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகளில் நீர் நிரப்பப்பட்டு வேளாண் பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்ள முடியும். விவசாயிகள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்தால், இப்பகுதி வியாபாரிகளும் முன்னேற்றம் அடைவார்கள்.

தமிழகத்தில் அதிக நிதி ஒதுக்கீடு செய்து ஒரு திட்டம் செயல்படுத்துகின்றது என்றால் அது காவிரி – குண்டாறு திட்டம் தான்.

இத்திட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம் விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் பயனடைவார்கள்.

இந்த அற்புதமான திட்டம் ராமநாதபுரத்தில் நிறைவேற்றப்படும். இந்த திட்டம் நிறைவேற்றுகின்ற போது, வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்றவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு திரும்பி வரும் போது, தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கின்றோமா அல்லது ராமநாதபுரத்தில் இருக்கின்றோமா என்ற அளவுக்கு எங்கு பார்த்தாலும் வயல்கள், பச்சை பசேல் என இந்த மாவட்டம் செழிப்பாக திகழும்”.

இவ்வாறு முதல்வர் பேசினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே