மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மின்சார சட்டத்திருத்த மசோதாவை நிறுத்தி வைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மின்சார சட்டத்திருத்த மசோதாவில் இருக்கும் புதிய திருத்தங்கள் மாநில கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும், மாநில அரசுகளின் அதிகாரங்களில் தலையிடுவதாகவும் உள்ளது.
கரோனா தடுப்புப் பணிகளில் நாட்டில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் கவனம் செலுத்துவதால், மத்திய அரசு அனுப்பியிருக்கும் சட்டத்திருத்த மசோதா மீது அலோசிக்க அவகாசம் தேவை.
விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்குவது என்பது மாநில அரசின் உரிமை சார்ந்தது.
அதை மாநில அரசிடமே விட்டுவிட வேண்டும்.
அது மட்டுமல்லாமல் மின்சார சட்டத்திருத்த மசோதாவில் கூறப்பட்டிருக்கும் சில ஷரத்துகள், மாநில அரசுகளின் மின்சாரத் துறைக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும் என்பதாலும், மேலும் சில அம்சங்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.
குறிப்பாக இதுபோன்ற பேரிடர் காலத்தில் இது மேலும் சிரமத்தை ஏற்படுத்தும்.
எனவே, இதுபோன்ற பேரிடர் காலத்தில், புதிய மின்சார சட்டத்திருத்த மசோதாவைக் கொண்டு வர இது சரியான காலமாக இருக்காது என்று தெரிகிறது.
எனவே, புதிய சட்டதிருத்த மசோதாவை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், பேரிடர் காலம் முடிந்த பிறகு, இது பற்றி தமிழக அரசு ஆலோசித்து பரிந்துரைகளை அனுப்பும் என்றும் தெரிவித்துள்ளார்.