மதுரையில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல்..!!

எங்கள் மீது பழி சுமத்துவதும் வசைபாடுவதுமே ஸ்டாலினின் வாழ்க்கையாக இருக்கிறது என மதுரையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

மதுரை மாநகராட்சிக்கு ரூ.1,205 கோடியில் நிறைவேற்றப்படும் முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் கே.பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.

முல்லைப்பெரியாறு லோயர் கேம் பகுதியிலிருந்து ரூ.1,205.76 கோடி மதிப்பீட்டில் மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் திட்டம் அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூ.31 கோடியில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கூடுதல் கட்டிடம் திறப்பு விழா மற்றும் முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகள் திறப்பு விழா , அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை மாவட்ட ஆட்சியர் அலவலக வளாகத்தில் நடந்தது.

நகராட்சி நிர்வாக ஆணையர் வரவேற்றார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்த விழாவில் முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, கூடுதல் ஆட்சியர் கட்டிடத்தை திறந்து வைத்து முதலமைச்சர் கே.பழனிசாமி பேசியதாவது:

முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் உறுதியாக மதுரை மாநகருக்கு நிறைவேற்றப்படும் என நான் அறிவித்து இருந்தேன்.

அதன்படி, தற்போது இந்த திட்டப்பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டி வைத்துள்ளேன்.

இந்தத் திட்டத்தால் மதுரை மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தங்கு தடையின்றி 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும். இது வரலாற்று சிறப்பு மிக்க திட்டம்.

அதிமுக அரசு எந்த திட்டத்தை அறிவித்தாலும் அதை உடனுக்குடன் அறிவித்து மக்கள் மனதில் நிற்கும்வகையில் அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

தமிழகம் முழுவதும் ஒன்று அல்ல, இரண்டு அல்ல 76 குடிநீர் திட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் தமிழகம் முழுவதும் மக்களுக்கு 4900 எம்எல்டி குடிநீர் வழங்கப்பட்டது.

அதிமுக அரசு எடுத்த நடவடிக்கையால் தற்போது 7600 எம்எல்டி குடிநீர் வழங்கி கொண்டிருக்கிறோம்.

கிட்டத்தட்ட 9 1/2 ஆண்டு ஆட்சியில் 2,700 எம்எல்டி குடிநீர் கூடுதலாக வழங்கி கொண்டிருக்கிறோம்.

இந்திய துணை கண்டத்தில் இவ்வளவு குறுகிய காலத்தில் கூடுதல் குடிநீர் கொடுத்தது வரலாறு கிடையாது. அந்த வரலாறை படைத்தது அதிமுக அரசுதான்.

புதிய 76 குடிநீர் திட்டங்கள் படிபடியாக நிறைவேற்றப்படுகிறபோது தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை இல்லை என்ற நிலை ஏற்படும்.

நகரப்புறங்கள் மட்டுமில்லாது கிராமங்களுக்கும் குழாய்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க மத்திய மாநில அரசுகள் ரூ.3600 கோடி நிதி ஒதுக்கீடு செய்து புதிதாக 40 லட்சம் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில், இதுவரை 7 1/2 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. குடிநீருக்காக மக்கள் போராடுகிற நிலை மாறி தமிழகம் முழுவதும் நிலையான பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறது.

முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் 2023ம் ஆண்டிலே நிறைவேற்றப்படும். இந்த திட்டம் வாயிலாக கிட்டத்தட்ட புதிதாக மதுரையில் 1 லட்சத்து 10 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.

ஏற்கெனவே பல்வேறு திட்டங்கள் வாயிலாக மதுரை மக்களுக்கு போதுமான குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு குடிநீர் வழங்கப்படுகிறது. அந்த குடிநீர் போதாது எனக்கூறியததால் முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படுகிறது.

இந்த திட்டம் எதிர்கால சந்தியினருக்காக அவர்களுக்கு குடிநீர் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக நிறைவேற்றப்படுகிறது.

இதேபோல், 1917ம் ஆண்டு கட்டப்பட்ட மிக பழமையான மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். போதுமான இடவசதி இல்லாததால் தற்போது கூடுதல் ஆட்சியர் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற சீர்மிகு நகரத்திட்டம் மூலம், ரூ.974.86 கோடியில் மதுரை நகருக்கு தேவையான பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது.

இதுபோல், பறக்கும் பாலம், உயர்மட்ட மேம்பாலம் என பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் நடக்கிறது. மதுரை விமானநிலையம் விரிவாக்கம் நடக்கிறது. அப்படி விரிவாக்கம் செய்யும்போது அங்கே சாலை குறுக்காக வருவதால் அதற்கு கீழ் பாலம் அமைக்க வேண்டும் என உள்ளூர் அமைச்சர்கள் , எம்எல்ஏ-க்கள் கோரிக்கை வைத்தார்கள்.

அதனால், விமானநிலையம் அருகே உள்ள சுற்றுச்சாலையில்(ரிங்ரோடு) விமான ஓடுதளத்திற்கு கீழாக சாலை செல்லும்படி கீழ்பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கிறேன்.

இவ்வளவு திட்டங்கள் நடந்தும் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் எதுவும் நடக்கவில்லை என்று பொய் பிரச்சாரம் செய்கிறார். இந்த ஆட்சி ஒரு தண்ட ஆட்சி என்று சொல்கிறார். அவர் பார்க்கிற பார்வையில் கோளாறா?, மனதில் கோளாறா? என்பது தெரியவில்லை.

அவர் வெளியே வந்து பார்த்தால்தானே வெளியே நடக்கிற அரசு திட்டங்கள், நல்ல விஷயங்கள் தெரியும். அவர் பூட்டிய அறையில் காணொலியில் பேசிக் கொண்டிருக்கிறார்.

அறையில் இருந்து முதலில் நீங்கள் வெளியே வந்து பாருங்கள். அரசு எவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு தற்போது நிறைவேற்றப்படும் திட்டங்கள் ஒரு சான்று. அதையும் புள்ளி விவரத்தோடு சொல்கிறோம்.

இந்தத் திட்டங்கள் மதுரை மாவட்டத்திற்கு மட்டுமே. இதுபோல், அனைத்து மாவட்டங்களுக்கு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். ஆனால், வேண்டுமென்றே திட்டமிட்டு ஏதாவது அவதூறு செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.

எப்போது பார்த்தாலும் எங்கள் மீது பழி சொல்வதுதான் அவர்களது வாடிக்கை. இவர்களும் என்ன செய்ய போகிறார்கள் என்று சொல்வதில்லை. ஆனால் செய்வதையும் பாராட்டும் மனம் கிடையாது.

அதிமுக அரசு சிறப்பாக செயல்படுவதால்தான் தேசிய அளவில் மத்திய அரசு அதிகமான விருதுகளை தமிழகத்திற்கு வழங்கிகொள்ளது. அதிகப்பட்மாக உள்ளாட்சித்துறை அதிக

விருதுகளை பெற்றுள்ளது. அதுபோல், மின்சாரத்துறை, வருவாய்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனை திட்டப்பணி விரைவில் தொடங்கப்படும்.

7.5 உள்ஒதுக்கீடு அரசு ஆணை வரலாற்று சிறப்பு மிக்கது. இதனால், அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மக்கள் நீட்தேர்வில் பயன்பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் படிக்கும் 41 சதவீதம் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் வெறும் 6 மருத்துவ இடங்களே கிடைத்தன. இந்த ஆண்டு 7.5 உள் ஒதுக்கீட்டால் எம்பிபிஎ மருத்துவப்படிப்பிலே 313 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைத்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் மட்டுமே 26 அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைத்துள்ளது. ஏழை மாணவர்களுடைய மருத்துவ கல்வி கனவை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது.

ஆனால், திமுக அரசோ தேர்தலை மையமாக வைத்து தேவையில்லாமல் அதிமுக அரசை நாள் தோறும் வசைப்பாடிக் கொண்டிருக்கிறார்.

அவர் அறையில் இருந்து கொண்டு விமர்ச்சித்துக் கொண்டிருக்கிறார். நாங்களோ மக்களை நேரில் சந்தித்து அந்தந்த பகுதிகளுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே