முதலமைச்சர் பழனிசாமி போலியோ முகாமை துவக்கி வைத்தார்

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் இன்று நடைபெற உள்ள போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

போலியோ பாதிப்பில் இருந்து குழந்தைகளைக் காக்கும் வகையில் நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது.

தமிழகத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க சுகாதாரத் துறை விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

அதன்படி 5 வயதுக்கு உள்பட்ட 70 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகளுக்கு இன்று காலை 7 முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்கள் ஆகியவற்றில் 1,652 சொட்டு மருந்து மையங்களும், 1,000 நடமாடும் போலியோ சொட்டு மருந்து மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

சொட்டு மருந்து வழங்கும் பணிக்காக அரசுப் பள்ளி ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் என தமிழகம் முழுவதும் மொத்தம் சுமார் 2 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமது இல்லத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதேபோன்று புதுச்சேரியிலும் முதலமைச்சர் நாராயணசாமி சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே