நீட் தேர்வு கூடாது என்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி..!!

நீட் தேர்வில் தமிழக அரசு என்ன நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்பது குறித்தும், ஆன்லைன் வகுப்புக்கான நெறிமுறைகளை வெளியிடுவது பற்றியும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் இணைய வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் தமிழகத் தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுக்கும்போது, பாலியல் சீண்டல்கள் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து ஐந்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனால் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னையில் இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசும்போது, ”ஆன்லைன் வகுப்புகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய வரைவு அறிக்கையை நான் ஒருமுறை பார்த்துவிட்டேன். இந்த அறிக்கையை இன்று முதல்வர் நேரம் கொடுத்த பிறகு அவரிடம் சமர்ப்பிக்க உள்ளோம். அவர் இதுகுறித்த முடிவை விரைவில் அறிவிப்பார்.

ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை முன்வைக்கும்போது இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை எப்படி இருக்கும், பாடப்புத்தகங்களை எப்படி விநியோகிக்கப் போகிறோம், தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை எப்படி முறைப்படுத்தப் போகிறோம் என்பது குறித்த ஆலோசனைகளையும் குறிப்பிட்டுள்ளோம். இதுகுறித்தும் முதல்வரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

நீட் தேர்வு முதன்முதலாகத் தமிழகத்திற்குள் நுழைந்தபோது, எதிர்க்கட்சியாக இருந்தபோதும் தொடர்ந்து எதிர்த்து வந்தோம். நீட்டை எதிர்த்துச் சட்டப்பேரவையில் குரல் கொடுத்திருக்கிறோம். இந்த முறை சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வு எக்காரணத்தைக் கொண்டும் தமிழகத்திற்குள் வரக்கூடாது என்று தெரிவித்துள்ளோம்.

அதை வலியுறுத்தும் விதமாகத்தான் தமிழக முதல்வர், பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். நீட் தேர்வு மட்டுமல்ல எந்த வகையான நுழைவுத் தேர்வாக இருந்தாலும் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்” என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே