சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி..!!

பா.ஜ., ஓட்டை வாங்க முயன்றால், அவர்களிடம் பணத்தை வாங்கி கொண்டு, ஓட்டை திரிணமுல் காங்கிரசுக்கு போடுங்கள் என மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.

மே.வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இதனால்,அங்கு ஆட்சியை தக்க வைக்க முதல்வர் மம்தாவும், ஆட்சியை பிடிப்பதற்கு மத்தியில் ஆளும் பா.ஜ.,வும் கடுமையாக போராடி வருகின்றன.

இன்று கோல்கட்டாவில் நடந்த பாஜ.,வின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, முதல்வர் மம்தா பானர்ஜி மாநிலத்தை விற்றுவிட்டதாகவும், ஊழல் தலைவிரித்தாடுகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கடுமையாக சாடினார்.

இந்நிலையில், இதன் பிறகு, காஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராக மே.வங்க மாநிலம் சிலிகுரியில் பாதயாத்திரை நடந்தது.

முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நடந்த இந்த பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

அப்போது மம்தா பேசியதாவது: மே.வங்கத்தில் பிரதமர் உள்ளார். காஸ் சிலிண்டர் விலை ஏன் அதிகரிக்கிறது என்பதற்கு முதலில் பதில் சொல்ல வேண்டும்.

மாற்றம் ஏற்படும் என பிரதமர் சொல்கிறார். மே.வங்கத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது.

தொடர்ந்து திரிணமுல் ஆட்சியில் இருக்கும். டில்லியில் தான் மாற்றம் ஏற்படும். மோடி தான் அங்கிருந்து செல்வார். மே.வங்கத்தில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மோடி சொல்கிறார்.

ஆனால், இங்கு பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர். சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் அவர்கள் சென்று வரலாம். உ.பி., பீஹார் உள்ளிட்ட மாநிலங்களை தான் நீங்கள் பார்க்க வேண்டும்.

காஸ் சிலிண்டர் விலையை ஏற்றி விட்டு, அதற்கு காரணம் சொல்லாமல், பெண்களை அவமதிக்கிறார்.மத்திய அரசு அனைத்தையும் விற்று வருகிறது.

டில்லியை விற்றனர். தாஜ்மஹாலை விற்றனர். ஏர் இந்தியா, பிஎஸ்என்எல், ரயில்வே என அனைத்தையும் விற்று விட்டனர். நேருக்கு நேர் எதையும் சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

ஓட்டை வாங்க பா.ஜ., முயன்றால், நீங்கள் பணத்தை வாங்கி கொண்டு திரிணமுல்லுக்கு ஓட்டு போடுங்கள்.

இந்தியாவுக்கு தெரிந்த கூட்டணி, மோடி- அமித்ஷா கூட்டணி தான். மோடி வெற்று வாக்குறுதிகளை அளித்து வருகிறார். மாநிலத்தை பிரிக்க பா.ஜ., முயற்சி செய்கிறது.

கொரோனா காலத்தில் மோடி, இங்கு வரவில்லை. வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கூட்டம் நடத்தினார். மக்களிடம் இருந்து பா.ஜ., தான் கொள்ளையடித்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே