சத்தீஸ்கர், சண்டிகரில் உருமாறிய கரோனா பரவலா?- ஆய்வு செய்ய மத்திய குழு பயணம்

கரோனா பரவல் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் சத்தீஸ்க்ர மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகரிலும் கரோனா பரவல் வேகமும், கரோனா மரணமும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து ஆய்வு செய்ய மத்திய குழு அங்கு பயணம் செய்கிறது.

மரபியலுக்கான இந்திய கரோனா கூட்டமைப்பின் கீழ் (INSACOG) 10 தேசிய பரிசோதனைக் கூடங்கள் அடங்கிய குழுவை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி அமைத்தது.

அப்போது முதல், நாட்டின் பல பகுதிகளில் இருந்து அனுப்பப்படும் கோவிட்-19 வைரஸ் மாதிரிகளில் வேறுபாடுகள் உள்ளதா என ‘இன்சாகாக்’ ஆய்வு செய்து வருகிறது. வைரஸின் இந்த மரபியல் மாறுபாடுகள் இயற்கையானது. இது அனைத்து நாடுகளிலும் காணப்படுகிறது.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அனுப்பிய 10,784 கோவிட் வைரஸ் மாதிரிகளில், 771 மாதிரிகள் மரபியல் வேறுபாடுகளுடன் இருந்தது கண்டறியப்பட்டது.

இவற்றில் 736 மாதிரிகள் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ். 34 மாதிரிகள் தென் ஆப்பிரிக்காவில் கண்டறிப்பட்ட வைரஸ் வகையைச் சேர்ந்தது. ஒரே ஒரு மாதிரி, பிரேசிலில் கண்டறிப்பட்ட கரோனா வைரஸ் மாதிரி. இந்த மாறுபட்ட வைரஸ் மாதிரிகள், 18 மாநிலங்களில் கண்டறியப்பட்டன.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடம் எடுக்கப்படும் மாதிரிகளும், இன்சாகாக் கூட்டமைப்பில் உள்ள 10 பரிசோதனைக் கூடங்களில் மரபியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

மகாராஷ்ராவில் இருந்து அனுப்பப்பட்ட மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, அவை 2020 டிசம்பர் மாதம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளுடன் ஒப்பிடப்பட்டன. இதில் மாறுபாடுகள் அதிகரித்து இருந்தது தெரியவந்தது.

இந்தநிலையில் கரோனா பரவல் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் சத்தீஸ்க்ர மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகரிலும் கரோனா பரவல் வேகமும், கரோனா மரணமும் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து மாறுபட்ட கரோனா ரைவஸ்கள் உள்ளதா என்ற ஆய்வு நடந்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இந்த பகுதிகளுக்கு மத்திய குழுவை சுகாதார அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் கே.சிங், அகில இந்திய மருத்து விஞ்ஞான கழகம் மற்றும் அகில இந்திய சுத்தம் மற்றும் பொது சுகாதாரம் நிறுவனம் உள்ளிட்ட மத்திய சுகாதார அமைச்சக நிறுவனங்களின் நிபுணர்கள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் கரோனா வேகமாக பரவி வருவதற்கான காரணம் மற்றும் பலி எண்ணிக்கை உயிருவதற்காக காரணம் குறித்து ஆய்வு செய்வார்கள். இதுமட்டுமல்லாமல் நோயாளிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் சோதனை முடிவடைந்த நிலையில் அதன் தன்மை குறித்தும் விரிவாக விசாரணை நடத்தவுள்ளனர். இவற்றில் உருமாறிய கரோனா பரவல் உள்ளதா எனவும், அதன் தாக்கம் பற்றியும் விரிவாக ஆய்வு செய்யவுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே